×

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை திமுக போராட்டம் தொடரும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மு.க. ஸ்டாலின்  கூறியுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல்  வழங்க கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: திமுகவை பொறுத்த வரையில் நீட் தேர்வே  கூடாது என்பதுதான் கொள்கை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உதயமான உடனே, நீட் தேர்வை சட்டப்படி ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்,  அதில் முழுமையாக வெற்றிபெறுவோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து  சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது. 40 நாட்களாகி விட்டன. இதுவரையிலும்  மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை.

ஆளுநரை பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பானவர். ஆளுநராக பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். வரைமுறைகளை  மீறி, ‘தமிழக முதல்வர் எடப்பாடியா, கவர்னரா?’ என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர். அவ்வளவு சுறுசுறுப்பானவர் இதில்  முடிவெடுக்க தாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அலட்சியம் என்ன? ‘எடப்பாடி அரசு எப்படி நம்மிடம் கேள்வி கேட்கலாம். எடப்பாடி கேட்க  மாட்டார்’ என்பதுதான் அவர் அலட்சியத்துக்கு காரணம். எடப்பாடி கேட்காவிட்டாலும் இந்த ஸ்டாலின் கேட்பான்; திமுக கேட்கும். அதில் எந்த  மாற்றமும் கிடையாது. அதற்கான அடையாளம் தான் இந்த போராட்டம்.

இந்த மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால்தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். இல்லையென்றால்  எட்டு பேர்தான் மருத்துவ கல்லூரியில் நுழைய முடியும் என்பது எவ்வளவு பெரிய கொடுமையானது. இது எவ்வளவு பெரிய அநீதி. மசோதாவுக்கு  ஆளுநரை ஒப்புதல் கொடுக்க வைக்க என்னென்ன வழிவகை உண்டோ அத்தனையையும் திமுக மேற்கொள்ளும். இந்த லட்சணத்தில் முதல்வர்  எடப்பாடி அறிக்கை விட்டிருக்கிறார். ‘ஸ்டாலின் அரசியல் செய்கிறார், திமுக அரசியல் செய்கிறது’ என்று. எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் பின்னே  என்ன அவியலா செய்துகொண்டிருக்கும். சமூகநீதியை நிலைநாட்ட, மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்க தி.மு.க. மேற்கொள்ளும் முயற்சிகளை  அரசியல் என்று சொன்னால் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வக்கற்ற வகையற்ற,  போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் அவதூறு பேசிக்கொண்டிருக்கலாம்.

இது முதற்கட்ட போராட்டம். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் திமுக தொடர்ந்து போராட்டத்தை நடத்திடும் - நடத்திடும் என்று  உறுதியளிக்கிறேன். நான் கேட்கிறேன்; இதே பதவியை பெறுவதற்காக தவழ்ந்து போய், ஊர்ந்துபோய் யாருடைய காலிலோ விழுந்து பதவியை  பெற்றீர்களே, மசோதாவை நிறைவேற்ற ஆளுநரிடம் மன்றாட முடியாதா, அவரிடம் தவழ்ந்து போகச் சொல்லவில்லை. போய் கேட்க முடியாதா, இந்த  நிலையில் நீங்கள் முதல்வர் பதவியில் உட்கார்ந்திருப்பது நியாயமா, இது அநியாயம் என்பதை வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள். திமுக  தன் போராட்டத்தை தொடரும், தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : struggle ,DMK ,government school students ,MK Stalin ,demonstration ,Chennai ,speech , DMK struggle will continue till government school students get quota: MK Stalin's speech at the Chennai protest
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி