×

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகை: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க  மறுக்கும் ஆளுநரையும், அதற்கு அழுத்தம் கொடுக்க தவறிய அதிமுக அரசை கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர்  மாளிகையை முற்றுகையிடும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மருத்துவக் கல்வியில்  தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி தமிழக  சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. அந்த மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.  ஆனால் இதுவரை மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை நினைத்து பார்க்க முடியாத  நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உடனடியாக 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல்  கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து  மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடந்த 21ம் தேதி கடிதம்  ஒன்றை எழுதினார், அதில், ‘முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள்’ என்று  தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு நேற்று முன்தினம் பதில் அளித்த ஆளுநர், ‘நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து  அனைத்து கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது’  என்று தெரிவித்து இருந்தார். இதற்கு, ‘ஏற்கனவே ஒரு மாத காலம் அவகாசம் முடிந்து விட்டது. இந்த நிலையில் குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம்  என்பது 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை,  எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானது. 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெற  அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார். அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர் என்ன வகையான போராட்டம், எந்த தேதியில்  போராட்டம் என்பதை அறிவிக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு  இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும்- ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி,  மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 24ம் தேதி திமுக சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், “இது முதற்கட்ட  போராட்டம். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் திமுக தொடர்ந்து போராட்டத்தை நடத்திடும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, தா.மோ.அன்பரசன், க.சுந்தர், ஆவடி நாசர்,  கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், ரங்கநாதன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ரவிச்சந்திரன், எழிலரசன், கிருஷ்ணசாமி, அரவிந்த்  ரமேஷ், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வி.ஜி.ராஜேந்திரன், வரலட்சுமி மதுசூதனன், இதயவர்மன், பூங்கோதை ஆலடி அருணா, வர்த்தகர் அணி  செயலாளர் காசி முத்து மாணிக்கம், பூச்சி முருகன், துறைமுகம் காஜா, அசன் முகமது ஜின்னா, பகுதி செயலாளர்கள் மதன்ேமாகன், மகேஷ்குமார்,

ஜெ.கருணாநிதி,  மா.பா.அன்புத்துரை, கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா அன்பழகன், பிரபாகர் ராஜா, தி.நகர் லயன்  சக்திவேல் உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து  கொண்டனர்.  இதில் பங்கேற்றவர்கள், “பறிக்காதே பறிக்காதே, இடஒதுக்கீடு எங்கள் உரிமை அதை பறிக்காதே, இடஒதுக்கீடு பெறும் வரை ஓய  மாட்டோம், நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்காதே” என்று கோஷங்களை எழுப்பினர்.  திமுகவினர் போராட்டத்தால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது.


* தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு  ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
* நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்து கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்துவதாக ஆளுநர்  தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் மீது வழக்கு
ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்காக மு.க.ஸ்டாலின் உள்பட 3500 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர்.  அதாவது, ஐபிசி 143(சட்டவிரோதமாக கூடுதல்), 151(நீண்ட நேரம் கூடுதல்), 269( தடை உத்தரவை மீறுதல்) மற்றும் சிட்டி போலீஸ் அக்ட் 41(பொது  இடத்தில் பேரணியாக வருதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



Tags : blockade ,House of Governors ,DMK ,MK Stalin , Delay in approving 7.5% quota bill: DMK blockades Governor's House: Thousands turn out under MK Stalin's leadership
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி