×

மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 6 மாத சலுகை வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கின்போது அளிக்கப்பட்ட வங்கிக் கடன் மாத தவணை சலுகை திட்டத்தை பயன்படுத்தியவர்களுக்கு, ₹2 கோடி  வரையிலான கடனுக்கான வட்டிக்கு வட்டியை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி  முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம்  மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது, மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில், வங்கிகள், நிதி  நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு செலுத்த தேவையில்ைல என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த  சலுகையை பயன்படுத்தி, நாடு முழுவதும் பல கோடி மக்கள் மாதத் தவணையை செலுத்தவில்லை.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கத் தொடங்கியதும், கடன்தாரர்களிடம் இருந்து இந்த மாதத் தவணையை வட்டிக்கு  வட்டியுடன் வசூலிக்கும் அதிரடி நடவடிக்கைகளில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஈடுபட்டன. இதனால், இந்த சலுகையை பயன்படுத்திய மக்கள்  கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து, இந்த வட்டிக்கு வட்டி நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை  விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி,  மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்,  ‘ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை 6 மாதங்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்க  முடியாது,’ என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மத்திய அரசு கூறியுள்ளபடி 6 மாத கால தவணைக்கான வட்டிக்கு வட்டியை, ரூ.2  கோடி வரையிலான அனைத்து கடன்களுக்கும் தள்ளுபடி செய்யப்படும். மேலும், தவணை செலுத்தும் காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது  சாத்தியமில்லை. புதிய சலுகைகளையும் வழங்க முடியாது. இதனால் கடன் வாங்கியவர், வாங்குபர் ஆகியோரின் நடத்தை முற்றிலும் பாதிக்கும்.  மேலும், பொருளாதார குற்றங்கள் மற்றும் அதுசார்ந்த அபாயங்களை ஏற்படும். வங்கிகளின் நிதி நிலையும் கடுமையாக பாதிக்கப்படும். இருப்பினும்,  இந்த சலுகையை வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டது. அவகாசம் கேட்ட ரிசர்வ் வங்கியின் செயலை கடுமையாக  கண்டித்த உச்ச நீதிமன்றம், ‘வட்டிக்கு வட்டி சலுகையை ஏன் உடனடியாக மக்களுக்கு வழங்கக் கூடாது?

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சாதாரண மனிதனின் அவலநிலை என்பது உங்களுக்கு புரியவில்லையா? கொஞ்சம் அதை நினைத்துப்  பாருங்கள். இனி வரும் காலங்களில் தீபாவளி பண்டிகை உட்பட பல்வேறு பண்டிகைகளை் வரிசையாக வர உள்ளன. அதை மக்கள் மகிழ்ச்சியாக  கொண்டாட வேண்டும். அது, இந்த சலுகையை அமல்படுத்துவதில்தான் உள்ளது.’ என கடுமையாக விமர்சித்தது. மேலும், வழக்கை நவம்பர் 2ம்  தேதிக்கு ஒத்திவைத்தது. அதற்கு முன்பாக, ‘இந்த சலுகை விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுத்து, மக்களின் கவலையை போக்கும் திட்டத்தை  செயல்படுத்துங்கள்,’ என கடந்த 14ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய நிதியமைச்சகம் நேற்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், ‘அரசு வழங்கிய  தவணை சலுகையை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்தாமல் பணத்தை செலுத்தாதவர்கள் என, ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும்  6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறுகுறு தொழி்ல் நிறுவனங்கள், கல்வி, வீட்டு வசதி, நுகர்வோர் பொருட்கள்,  வாகன கடன்கள், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் என அனைத்து நிலுவைகளுக்கும் இந்த வட்டி தள்ளுபடி  பொருந்தும்.

இது, கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.  இதையடுத்து, கொரோனா ஊரடங்கின்போது 6 மாதங்களுக்கு தவணை செலுத்தாத அனைவருக்கும் வட்டிக்கு வட்டி சலுகை கிடைத்துள்ளது.

மாதத்தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் சலுகை
கொரோனா ஊரடங்கின் போதும் மத்திய அரசு வழங்கிய மாத தவணை சலுகையை பயன்படுத்தாமல், பல கோடி மக்கள் தங்கள் மாதத் தவணையை  முறையாக செலுத்தி இருக்கின்றனர். மத்திய நிதியமைச்சகத்தின் நேற்றைய அறிவிப்பில், இவர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்  அறிவிப்பில், ‘மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதங்களுக்கு மாதத் தவணை சலுகையை பயன்படுத்தாமல், வங்கியின் சட்ட விதிகளுக்கு  உட்பட்டு முறையாக தவணையை திருப்பி செலுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும்.

இது குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பாணை, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’ என  கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், தவணையை முறையாக செலுத்திய மக்களுக்கும் வட்டிக்கு வட்டிக்கு இணையான தொகை திரும்ப கிடைக்கும் என  தெரிகிறது.

Tags : Government ,Supreme Court , 6-month offer from March 1 to August 31 to waive interest on bank loan: Federal Government announces action on Supreme Court order
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்