×

கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பு பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்: திருவாலங்காட்டில் பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிகுளம் கிராமத்தில் தும்பிகுளம் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள 200 பேர், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். பின்னர் அந்த பாலை திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். தினமும் காலை, மாலை வேளைகளில் பாலை கொள்முதல் செய்து அனுப்பிவைக்கின்றனர்.

பாலின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணம் பால் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்பிறகு பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சில மாதங்களாக குளிரூட்டும்  நிலையத்துக்கு அனுப்பப்படும் பால் தரம் இல்லை என்று கூறி வாரத்துக்கு 3 நாட்களுக்கு பாலை தும்பிகுளம் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் உறுப்பினர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள்  வேண்டுமென்றே செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை தும்பிகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டனர். திடீரென அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பாலை கேன்களில் இருந்து தரையில் கொட்டி நிர்வாகத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கூறுகையில், ‘’விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் பால் உற்பத்தி செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து ஏதோதோ காரணம் கூறி, பால் கொள்முல் செய்யாமல் தட்டிக்கழிக்கின்றனர்.

இதனால் கடும் மன உளைச்சலில் உள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு உறுப்பினர்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக உற்பத்தியாளர்களிடம் பாலை  கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Demonstration in Thiruvalankad sparks protest as officials refuse to buy milk
× RELATED யானை தாக்கி விவசாயி பலி