செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.115 கோடியில் கப்பல் வடிவில் 5 மாடி கொண்ட நிரந்தர கலெக்டர் அலுவலகம் : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய கலெக்டர் அலுவலகத்துக்கான அடிக்கல்லை காணொலி காட்சி மூலம் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்து வந்த மாவட்டத்தை  இரண்டாகப்  பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு  ஜூலை 18ம் தேதி செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி, செங்கல்பட்டை புதிய மாவட்டமாக தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

இதைதொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு செங்கல்பட்டு அரசு ஐடிஐ வளாகத்தில் 75 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டு ஆகியும் நிரந்தர கட்டிடம் கட்டவில்லை. தற்காலிகமாக பழைய ஆர்டிஒ அலுவலகத்தில் செயல்படுகிறது. இந்நிலையில், ரூ.115 கோடியில் நிரந்தர கலெக்டர் அலுவலகம் கடடுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் காலை 9.30 மணிக்கு துவக்கி வைத்தார். புதிதாக கட்டப்படும் இந்த அலுவலகம் கப்பல் வடிவில் 5 மாடி கொண்டதாக கட்டப்படவுள்ளது. இந்த ஒருங்கிணைந்த கட்டிடத்தில் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்படும் என கூறப்படுகிறது.

Related Stories: