சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் நிலக்கரி எரியூட்டப்பட்டு நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு அங்கிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் ராட்சத குழாய்கள் மூலம் செப்பாக்கம் அடுத்த செங்கழுநீர்மேடு .ஊரணம்பேடு வாயலூர் உள்ளிட்ட கிராமத்தில் குளத்தில் சேமிக்கப்படுகிறது.

 ராட்சத குழாயில் செல்லும் கழிவுநீர் சாம்பல் தண்ணீர் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு  அருகில் உள்ள செப்பாக்கம் கிராமத்தில் செல்கிறது. இதனால் செப்பாக்கம் கிராமம் முழுவதும் சாம்பல் கழிவு நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் சேதுராமன் தலைமையில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி முன்னிலையில் கிராம மக்கள்  சிஐடியு மாவட்டத் தலைவர் விஜயன் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி .நரேஷ் குமார் ஊராட்சித் துணைத் தலைவர் வினோதினி வினோத் வார்டு உறுப்பினர்கள் இளைஞர்கள் மகளிர்கள் இணைந்து மாற்று இடம் கொடுத்து, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைத்து வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சாம்பல் கழிவு நீர் சூழ்ந்திருப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் பருக முடியாத நிலையில் உள்ளது எனவும், சாம்பல் துகள்களால் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், உடல் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். கிராம மக்களுக்கு வேறு இடத்தில் மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அனல் மின் நிலையத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கிராம மக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த வடசென்னை அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: