×

மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

திருத்தணி:  மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 இருளர் குடும்பத்தினரை சேர்ந்த ஏழு பேரை நேற்று வருவாய் கோட்டாட்சியர் மீட்டு நிவாரணம் வழங்கினார். திருவாலங்காடு ஒன்றியம், கோடுவள்ளி கிராமம் அருகே இரண்டு இருளர் குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும், இவர்கள் மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் உமா ஆகியோர் கோடுவள்ளி கிராமத்திற்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர் சேர்ந்த, கோபி (33), சுமதி(31), சங்கர் (28), தேசம்மா(23),

நந்தினி (12), யுவராஜ் (7) மற்றும் ஆனந்த் (5) ஆகிய ஏழு பேரை  நேற்று மீட்டனர். பின், அவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விடுதலை சான்று, அரிசி, பருப்பு மற்றும் ரொக்கம் தலா ஆயிரம் ரூபாய் என வழங்கி, இருளர்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர், ராணிப்பேட்டை மாவட்டம் பராஞ்சி பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ரமேஷ் (40) என்பவர் தலா ஒரு குடும்பத்தினருக்கு, 20 ஆயிரம் கடனாக வழங்கி,

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இவர்களுக்கு குடிசை வீடு அமைத்து, வாரத்திற்கு, 500 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். உணவு மற்றும் உடமைகள் வழங்கி வருவதாக தெரியவந்தது. தலைமறைவான ரமேஷ் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : persons ,timber merchant , Rescue of 7 persons who were in bondage to the timber merchant: 1000 and sent back to their hometown
× RELATED அரபிக் கடல் பகுதியில் விபத்தில்...