×

ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

சென்னை: மத்திய மேற்குவங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட மேற்குவங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், நகரமே தண்ணீரில் மிதந்தது.  வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு காற்றழுத்தமாக வலுப்பெற்று இருந்தது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை 4.15 மணிக்கு இடியுடன் கூடிய மழை 1 மணி நேரம் பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகள் மழை நீரில் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.

மாலை 4.15 மணிக்கு சாலைகள் இருளில் மூழ்கியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. சென்னையின் முக்கியமான சாலையான அண்ணா சாலையில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. பல கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதுதவிர நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், போன்ற முக்கிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனையிலும் மழை நீர் புகுந்தது.

புறநகரான தாம்பரம், பூந்தமல்லி, போரூர், மாமல்லபுரம், வேளச்சேரி, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை நேற்று இரவு 8 வரை நீடித்தது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

60மிமீ மழை பதிவு
சென்னையில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இடியுடன் கூடிய மழையால் சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இந்த ஒருமணி நேர மழையில் சென்னை நகரில் நுங்கம்பாக்கத்தில் 60மிமீ மழை பதிவாகியுள்ளது. கே.கே.நகர். 60மிமீ, முகப்பேர் 60மிமீ, சில இடங்களில் 50மிமீ முதல் 40மிமீ மழை பெய்துள்ளது.Tags : city ,Chennai ,Bay of Bengal , Chennai city submerged by heavy rains for an hour: Depression in the Bay of Bengal
× RELATED மழை நீர் சூழ்ந்ததால் மூடப்பட்ட...