சசிகலா விடுதலையாகும் அறிவிப்பு ஒரு வாரத்தில் வரும்: வக்கீல் தகவலால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சிறையிலிருந்து தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலையாகி  வெளிவரும் அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வரும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலா தண்டனை காலம் 2021 பிப்ரவரியில் முடிகிறது.

இந்நிலையில், தனது தண்டனை காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும், நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.10 கோடியை பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள் என்றும், இதுகுறித்து டிடிவி. தினகரனுடன் ஆலோசிக்குமாறும் சமீபத்தில் சசிகலா அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, ‘பெங்களூருவில் தசரா விழா நடக்கிறது. அதன் பிறகுதான் சசிகலா விடுதலை குறித்து தெரியவரும்’ என்றார்.

இந்நிலையில், அவர் கூறும்போது, ‘‘இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்” எனக் கூறினார்.சசிகலா விரைவில் வெளியே வருவார் என்ற செய்தி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: