வரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்

சென்னை: வரத்து குறைவால் பல்லாரி வெங்காயம் விலை ரூ.130க்கு விற்பனையாகிறது. விலை அதிகரிப்பால் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பல்லாரி வெங்காயம் (பெரிய வெங்காயம்) விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த மாநிலங்களில் கடுமையான மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாதாரண நாட்களில் தினமும் 80 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. இது தற்போது 40 லாரிகள் அளவுக்கு தான் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அதிக அளவில் டேமேஜ் வேறு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வரத்து குறைவால் கடந்த மாதம் ரூ.25, ரூ.30 என்று விற்கப்பட்ட பல்லாரி வெங்காயம், தற்போது கிடுடுவென உயர்ந்து கிலோ ரூ.80, ரூ.90 என்று விற்பனையாகிறது. இதேபோல சின்ன வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது தற்போது இது ரூ.90 வரை விற்பனையாகிறது. இது மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை.

இதை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.120, ரூ.130 என்று விற்பனை செய்கின்றனர். அதேபோல சின்ன வெங்காயமும் கிலோ ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. முன்னர் பல்லாரி வெங்காயத்தை தேர்வு செய்து எடுக்கலாம். விலை உயர்வால் அவ்வாறு எடுக்க சிலக்கடைக்காரர்கள் தடை விதித்துள்ளனர். சமையலில் வெங்காயம் என்பது முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில் வெங்காயம் விலை உயர்வை சந்தித்து வருவது இல்லத்தரசிகளை கலக்கமடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்காயம் விலை உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் வந்தது. தற்போது விலை உயர்வை கேட்டு தானாகவே கண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. விலை உயர்வால் கிலோ கணக்கில் வெங்காயத்தை வாங்கி வந்தவர்கள் தற்போது கிராம் கணக்கில் வாங்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சமையலிலும் வெங்காயத்தின் பயன்பாட்டை குறைக்க தொடங்கியுள்ளனர். இட்லி, தோசைக்கு வெங்காயம் சட்னி என்பது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போது வெங்காயச் சட்டினிக்கு பதிலாக தக்காளி சட்னிக்கு மாறியுள்ளனர். பெரும்பாலானான ஓட்டல்களில் வெங்காயச்சட்டினி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெங்காயம் விலை அதிகரிப்பை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. விலை குறைவு என்றாலும் சுவை இல்லாததால் அந்த வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

* எகிப்து வெங்காயத்தில் சுவை இல்லை

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கிலோ ரூ.200ஐ தாண்டி விற்பனையானது. விலை உயர்வை தடுக்கும் வகையில் எகிப்தில் இருந்து 1 லட்சம் டன் அளவுக்கு வெங்காயம் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டது. இந்த வெங்காயம் 50 சதவீதம் அளவுக்கு தான் விற்பனையானது. பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் இந்த வெங்காயம் நம்மூர் வெங்காயத்தை போல காரமும், சுவையும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். நம்மூர் வெங்காயத்தை வெட்டினால் கண்களில் கண்ணீர் வரும். எகிப்து வெங்காயத்தில் அவ்வாறு கண்ணீர் வராது. மேலும் இந்த வெங்காயம் அதிக அளவில் எண்ணெய் குடிக்கும். அது மட்டுமல்லாமல் இந்த வெங்காயம் பெரிதாக இருக்கும். ஒரு கிலோவுக்கு

4 முதல் 5 வெங்காயம் வரை தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>