×

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் வாய்ப்பு: கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடுகையில் அதிர்ச்சி; 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க இதைவிட வேறு காரணம் தேவையில்லை

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால் 300க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர் அறிவிப்பு வெளியிட இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

35 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர், ஒப்புதல் வழங்காமல் உள்ளார். கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடு முழுவதும் இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவடைந்து விட்டதால் விரைவில் மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் கவுன்சலிங் நடைபெறும் என்று நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர், இரு நாட்களுக்கு முன்னர் சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினர். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால், இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் செல்வார்கள் என்று கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்பினால், மீண்டும் தமிழக அரசு கவர்னருக்கு அதே மசோதாவை அனுப்பி வைத்தால் ஒப்புதல் கொடுத்தாக வேண்டும்.

ஆனாலும். கவர்னர் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வருவது மத்திய அரசின் தலையீடும் இதில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்காமலேயே தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடக்க வேண்டும் என்பதை கவர்னர் எதிர்பார்க்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கவர்னருக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள கவர்னர், ‘‘நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன்.

இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். இது,முடிவு எடுப்பதை அவர் தள்ளிப்போட்டு வருவதையே காட்டுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், கடந்தாண்டு கவுன்சலிங்கில் கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு பொது பிரிவினருக்கு கட்ஆப் மதிப்பெண் 520 ஆக இருந்தது. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் இருந்தது. இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 89 பேர் 300க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால்தான், 8 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2 சீட், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சீட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கினால், 300க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறுவது தமிழக கவர்னரின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துவது சரியல்ல. கவர்னர் இனியும் காலம் தாழ்த்தாமல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு கானல் நீராகி விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

* 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சிறப்பு மசோதா தமிழக பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
* கவர்னருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டு, 35 நாட்களுக்கு மேலாகியும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர் அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் கவுன்சலிங் நடக்கும் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

Tags : government school students ,Tamil Nadu ,Governor , MBBS seat opportunity for only 8 government school students in Tamil Nadu: shock compared to last year's cut-off score; There is no reason other than this for the Governor to approve the 7.5% reservation bill
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்