×

பணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் : தெலங்கானாவில் பயங்கரம்

திருமலை: தெலங்கானாவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திச் சென்று 45 லட்சம் கேட்டு மிரட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மகபூப் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தீக்‌ஷித். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் முன்பாக விளையாடி  கொண்டிருந்தான். அப்போது, பைக்கில் வந்த வாலிபர், அவனை கடத்தி சென்றான்.  இதை யாரும் கவனிக்கவில்லை. மகனை காணாததால் அக்கம் பக்கத்தில் எல்லாம் பெற்றோர் தேடி வந்தனர். அப்போது, இரவு 9 மணியளவில் தீக்‌ஷித்தின் தாய் வசந்தாவுக்கு போன் செய்த மர்ம மனிதன், ‘45 லட்சம் பணம் கொடுத்தால் உன் மகனை விடுவிப்போம்,’ என்று மிரட்டினான். மேலும், குறிப்பிட்ட இடத்தை கூறி, ‘இரவுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உன் மகனை கொலை செய்து விடுவோம்,’ என்று தொலைபேசியை துண்டித்து விட்டான்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பணத்தை தயார் செய்துகொண்டு கடத்தல்காரன் சொன்ன இடத்திற்கு பணத்துடன் சென்று விடிய விடிய காத்திருந்தனர். ஆனால், பணத்தை வாங்கிச் செல்ல யாரும் வரவில்லை. இந்நிலையில், மகபூப் நகர் அருகே உள்ள மலை குன்று ஒன்றில்  சிறுவன் ஒருவன் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எரிக்கப்பட்ட உடல் கடத்தப்பட்ட சிறுவன் தீக்‌ஷித் உடையது என்றும், தீக்‌ஷித்தை கடத்தி சென்றவன் அவனை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருப்பதையும் உறுதி செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மகபூப் நகர் போலீசார், தீக்‌ஷித் விளையாடிக் கொண்டிருந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், தீக்‌ஷித்தை கடத்திச் சென்று கொலை செய்த சாகர் (25) என்ற இளைஞரை நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம், தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Telangana , Man burns kidnapped boy for money: Terror in Telangan
× RELATED கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி