×

தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகளின், 650வது உற்சவ விழா, கடந்த 12ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் விமரிசையாக நடக்கும் இந்த உற்சவம் கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு எளிமையாக நடந்தது. விழாவின், 10வது நாளான  நேற்று முன்தினம் இரவு சாற்றுமுறை உற்சவம் நடந்தது. இதில் மணவாள மாமுனிகள் சன்னதியில் சமத்துவ வழிபாடு நடத்த வேண்டும். இந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். திவ்ய பிரபந்த பாடல்களை தமிழில் பாட வேண்டும் என ஒரு பிரிவினர் முயன்றனர். ஆனால், அவர்களை மற்றொரு தரப்பினர் தடுத்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.  அந்த நேரத்தில், மணவாள மாமுனிகள் சன்னதியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திவ்வியபிரபந்தம் தமிழில் பாட முயன்ற திருமாலடியார் மாதவ ராமானுச தாசன் என்பவரை தள்ளிவிடும் நோக்கில் ஒரு தரப்பினர் நடந்துகொண்டதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார், அங்கு சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து விலக்கி விட்டனர். காவல்துறையினர், கோயில் நிர்வாக அலுவலர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மணவாள மாமுனிகள் சன்னதியில் உள்ளே அமர்ந்து பாடிக்கொண்டிருந்த தென்கலை பிரிவை சேர்ந்த பாகவதர்களை எழுப்பி வெளியே அனுப்பி இந்த பிரச்னையை தற்காலிகமாக முடித்து வைத்தனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், இந்த கோயிலின் மணவாள மாமுனிகள் சன்னதி மண்டபத்தில் தென்கலை சேர்ந்தவர்களை  உட்கார வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
பிராமணரல்லாத இந்துக்கள் வாசற்படி வெளியே மட்டுமே நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடமுடியும். இவர்கள் மாமுனிவர் மண்டபத்தில் உட்புறம் சென்று பாடல் ஓதிடவும், சடாரி, பிரசாதம், தீர்த்தம் ஆகியவை பெறவும் அனுமதி கிடையாது. தமிழில் திவ்ய பிரபந்தம் பாட வருபவர்களை அனுமதிக்காமல், தள்ளிவிட்டு தடுக்கப்படுவதை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இராமானுஜரின் 1000வது ஆண்டிலும் இக்கொடுமை தொடர்வதற்கு மணவாள மாமுனிவர் சந்ததி தரப்பினர் தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்றனர்.

Tags : Thousand Divine Prabhupada ,Kanchi Varatharaja Perumal Temple , Debate erupts between two factions over singing 4,000 Divya Prabhandam in Tamil: Kanchi Varatharaja Perumal temple commotion
× RELATED போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி...