×

அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் மிரட்டல் இ-மெயில்: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க  அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வாக்காளர்களை மிரட்டும் வகையில், வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல் இ-மெயில்கள் அனுப்பப்பட்டு உள்ளன. புளோரிடா,  பென்சில்வேனியா உட்பட 4 மாகாணங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இந்த இ-மெயில்கள் வந்துள்ளன. அதில், ‘நீங்கள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிக்கவில்லை என்றால், நாங்கள் உங்கள் பின் வருவோம்,’ என மிரட்டப்பட்டு உள்ளது. வாக்காளர் பதிவு பட்டியல்களில் இருந்து பெறப்பட்ட இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி, இவை அனுப்பப்பட்டு உள்ளன.  இவை ஈரானில் இருந்து வந்திருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்கிளிப் கூறுகையில்,  ‘அமெரிக்க  தேர்தலில் எந்த நாடு தலையிட்டாலும் அமெரிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும்,’ என எச்சரித்துள்ளார்.

வணிக விசாக்களுக்கு அமெரிக்கா திடீர் தடை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறப்பு தொழில்களுக்கான எச்-1பி விசாக்களுக்கு அமெரிக்கா நேற்று முதல் திடீரென தடை விதித்துள்ளது. ‘சிறப்பு தொழில்களுக்கான தற்காலிக வணிக விசாவை வழங்க வேண்டாம்,’ என அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் உள்ள பணிகளை முடிப்பதற்காக குறுகிய காலத்திற்கு தங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களை பி-1 விசாக்களில் அனுப்பும் பல இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags : run-up ,US ,election ,Iran , Threatening e-mail from abroad in the run-up to the presidential election: US blames Iran
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...