ஒரு மணி நேர மழை; தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: ஒரு மணி நேர மழைக்கே தமிழகத்தின் நிலை தள்ளாடுவதாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் பாரதீப்பிற்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 23ம் தேதி மேற்கு வங்கம் சாகர் தீவுகள் அருகே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுத்ததால் துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் 1,2 ஆகிய புயல் கூண்டுகள் ஏற்பட்டுள்ளன.

எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எண் 1 புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னையில் பல்வேறு பகுதிகளில்  இன்று மாலை பரவரவலாக மழை பெய்தது. சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

அதேபோல் காமராஜர் சாலை, வேப்பேரி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: