வடுவூர் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: சீசன் களை கட்டியது

மன்னார்குடி: வடுவூர் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 38 வகையான 2லட்சம் பறவைகளை வந்து செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக வரும் இந்த பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிறது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கிறது. நடப்பாண்டு மத்திய ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆசியா, கஜகஸ்தான், ஆப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வடுவூர் பாதுகாக்கப்பட பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து வன உயிரியல் விஞ்ஞானி குமரகுரு கூறுகையில், கடந்த வருடங்களை காட்டிலும் இந்தாண்டு வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவிலான பறவைகள் வரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

குறிப்பாக, நடப்பாண்டு சீசன் துவங்க உள்ள நிலையிலேயே அறிவால் மூக்கன், தாமரை இலைக்கோழி, புள்ளி மூக்கு வாத்து, சிறவி போன்ற அயல்நாட்டு பறவைகள் கடந்தாண்டை விட தற்போது அதிகளவில் குவிய துவங்கியது. கூழைக்கிடா, ரப், உள்ளான் வகை பறவை இனங்கள் ஜனவரி மாத துவக்கத்தில் வருவது வழக்கம். ஆனால், தற்போது வடுவூரில் பறவைகளுக்கு ஏற்ப சாதகமான சூழல் நிலவுவதால் முன் கூட்டியே பல்லாயிரக்கணக்கான அயல் நாட்டு பறவைகள் குவிந்து வருவது மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்றார்.

Related Stories: