அமெரிக்க தேர்தல்: ஜனாதிபதி ரேசில் முந்துகிறார் ஜோ பிடென்

நியூயார்க்: தற்போதைய கருத்து கணிப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, ஜோ பிடென் பின்னுக்கு தள்ளி முந்தி வருகிறார். இதனால் அமெரிக்க தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தல் நவ.3ம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனர்ட் டிரம்ப், மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென், அவரை எதிர்த்து களம் இறங்கியுள்ளார். இக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், பிரசாரங்களில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், தனது நிதானமான பேச்சுகளால் மற்றொரு புறம் மக்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் மாகாண வாரியாக எடுக்கப்பட்டுள்ள லேட்டஸ்ட் கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்புகளின் மூலம் பென்சில்வேனியா, புளோரிடா மாகாணங்களில் ஜோ பிடென் வலுவான நிலையில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டெக்சாஸில் இருவரும் சமநிலையில் உள்ளனர். ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 20 எலக்டோரல் வாக்குகள் பென்சில்வேனியாவில் உள்ளன. அந்த மாகாணத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் ஜோ பிடெனுக்கு 53 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்புக்கு 43 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

29 எலக்டோரல் வாக்குகள் உள்ள புளோரிடாவில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளிலும் ஜோ பிடெனே முன்னிலையில் உள்ளார். அங்கு அவருக்கு ஆதரவு 50 சதவீதம். டிரம்ப்புக்கு 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் இருவரும் 47 சதவீத ஆதரவுடன் சமநிலையில் உள்ளனர். ஆனால் கடந்த செப்டம்பர் துவக்கத்தில் டெக்சாஸில் இதே குவின்னிபாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பில் டிரம்ப்புக்கு 50 சதவீதம் மக்களும், ஜோ பிடெனுக்கு 40 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பிராசத்தில் உள்ளனர். இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், டிரம்ப் கடந்த் 10 நாட்களுக்கு முன்னர் 3 நாட்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரு கட்சிகளின் வேட்பாளர்களிடையே நடைபெற இருந்த ‘நேருக்கு நேர் விவாதம்’ நடைபெறவில்லை. அடுத்த வாரம் அந்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: