நுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத கொரோனா பரிசோதனை: சென்னையில் தொற்று அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்த பலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட போதும் பலருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. அவ்வாறு நெகட்டிவ் முடிவுகள் வந்தவர்கள் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது நுரையீரலில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளில் 30 முதல் 40%-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கொரோனாவுக்கான எந்த அறிகுறியும், சிகிச்சையும் இன்றி இயல்பு வாழ்க்கையை தொடர்கின்றனர். இந்நிலையில் சிடி ஸ்கேனால் கொரோனா தொற்றை கண்டறிய முடியாது என்று சுகாதாரத்துறை செய்யாலர் திரு. ராதாகிருஷ்ணன் கூறினார். இதனிடையே சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறித்து செரோ எனப்படும் ரத்த மாதிரி ஆய்வு 2- கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஜூலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 5-ல் ஒருவருக்கு இருந்த கொரோனா தொற்று தற்போது 3-ல் ஒருவருக்கு என அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துவிட்டதாக அலட்சியமாக இருக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: