சென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை; ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகர் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்ததால் மாலை 4 மணிக்கே இரவு 7 மணி போல் இருள் கவிந்தது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவரவலாக மழை பெய்து வருகிறது. அதாவது மதியம் 2 மணி அளவில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் 4 மணி அளவில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், சென்ட்ரல், திருவொற்றியூர், ராயபுரம், மெரினா, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அயனாவரம், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அய்யப்பன்தாங்கல், தேனாம்பேட்டை, தாம்பரம், பெருங்குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக சென்னையில் இருள்சுழந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே  சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: