முதல்வர் வேட்பாளரை பாஜவின் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்: தமிழக தலைவர் எல்.முருகன் அதிரடி

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கொரோனா இந்தியாவில் குறைந்து வரக்கூடிய சூழலில் பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும். அதிமுக, பாஜ கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவர் எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது. பிரதமர் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் உரையின் சாராம்சம். தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு கொண்டு வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் மூலம் விவசாயம் மற்றும் மீன் வளத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: