தேர்தல் பிரசாரத்தின் போது மழை மேடையில் உற்சாக நடனமாடிய கமலா: மக்கள் குதூகலம்

புளோரிடா: அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தின்போது துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், இக்கட்சியின்  துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது. புளோரிடாவில் கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.

அப்போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது. மேடையில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த கமலா ஹாரிஸ், மழை வந்தபோதும் அங்கிருந்து செல்லவில்லை. மாறாக குடையை பிடித்தப்படி தனது பிரசாரத்தை தொடர்ந்தார். மேலும், அங்கு திரண்டு இருந்த ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குடையை பிடித்தபடி மழையில் நடனமாடினார். கமலா நடனமாடியதை பார்த்த உற்சாகத்தில் அங்கு கூடியிருந்த மக்களும் நடனமாடி மகிழ்ந்தனர். மேடை மீது கமலா ஹாரிஸ் குடைபிடித்தபடி நடனமாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை இதுவரை 2 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ், ‘மழையோ, வெயிலோ அல்லது ஜனநாயகமோ யாருக்காகவும் காத்திருக்காது,’ என கூறியுள்ளார்.

Related Stories: