×

விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெங்காயத்துக்கான இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. வெங்காய விளைச்சல் அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடுமையான மழையால் வெங்காய பயிர்கள் நாசமானதோடு, கிடங்குகளில் சேமிக்கப்பட்ட வெங்காயமும் நாசமாகி விட்டன. இதன் காரணமாக நாட்டில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் விலை கிலோ ரூ.100 வரையில் அதிகரித்துள்ளது. இது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக. கடந்த மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், வெங்காய இறக்குமதியை எளிதாக்கும் வகையில், அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு நேற்று தளர்த்தியது.

 இது தொடர்பாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காரிப் அறுவடை காலம் முடியும் போது, மண்டிகளுக்கு 37 லட்சம் டன் வெங்காயம் கிடைக்கத் தொடங்கும். இதன் மூலம், அவற்றின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். கடந்த 10 நாட்களில் வெங்காய விலையானது கிலோவுக்கு 11.56 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம், சில்லறை விலையானது கிரூ.51.95 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 12.13 சதவீதம் அதிகம். இந்நிலையில், வெங்காயம் அதிகளவில் கிடைப்பதற்காக, வரும் டிசம்பர் 21ம் தேதி வரை இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. வெங்காய இறக்குமதியை அதிகரிப்பதற்காக, வர்த்தகர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் தரும்படி வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கிருமி நீக்கம் செய்யப்படாமல் அனுப்பப்படும் வெங்காயம், இந்திய துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு, அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதற்கான சான்றுகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Loosening of onion import restrictions to control inflation: Federal action
× RELATED ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை