×

பெண் அமைச்சர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக கமல்நாத்க்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

டெல்லி: பெண் அமைச்சர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக கமல்நாத்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் இமர்தி தேவி. இவர், ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர். கடந்த மார்ச் மாதம், கமல்நாத்துக்கு எதிராக ஜோதிர்ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தியபோது, அவருடைய ஆதரவாளர்களான இமர்தி தேவி உள்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

அதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம் மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டபோது, இமர்தி தேவி அமைச்சராக பதவி ஏற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், குவாலியர் மாவட்டம் டாப்ரா தொகுதியில் இமர்தி தேவி போட்டியிடுகிறார்.

நேற்றுமுன்தினம் அத்தொகுதியில் பிரசாரம் செய்த கமல்நாத், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எளிமையானவர். ஆனால், எதிர்த்து போட்டியிடுபவர் ஒரு ஐட்டம் என்று பேசினார். அவரது கருத்து, பலத்த சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. கமல்நாத் பேச்சை கண்டித்து, ஆளும் பா.ஜனதா சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 2 மணி நேர மவுன விரத போராட்டம் நடைபெற்றது.

மேலும் கமல்நாத்தை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் சவுகான் கடிதம் எழுதியிருக்கிறார். கமல்நாத்தின் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தோதல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கமல்நாத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அவதூறுப் பேச்சு சர்ச்சையானதையடுத்து, கமல்நாத் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில்,  மத்திய பிரதேச அமைச்சர் இமர்தி தேவியை அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் 2 நாட்களில் பதில் அளிக்க அம்மாநில முன்னாள் முதலமைச்சா் கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags : Election Commission ,Kamal Nath ,woman minister , Female Minister, Controversy, to Kamal Nath, Notice
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...