×

வித்தியாசமா... ஜாலியா... சமூக இடைவெளி லைஃப் ஸ்டைல்!

நன்றி குங்குமம்

எதுவாக இருந்தாலும் தள்ளி நின்று பேசுங்கள்... இதுதான் உலகின் இப்போதைய தாரக மந்திரம். இதை கப்பென்று பிடித்துக் கொண்டு உலகமே தலைகீழாக மாறி வருகிறது! மெக்ஸிகோவின் பர்கர் கிங் ரெஸ்டாரெண்ட் இரண்டு மாதங்கள் தீவிர ஊரடங்கிற்கு பிறகு தன் சேவையைத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களை முன்பு போல் வரவழைக்கவும், சமூக இடைவெளி அவசியம் கருதியும் பெரிய வட்ட வடிவ கிரீடம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பர்கர் சாப்பிட வருவோர் அந்த கிரீடத்தை அணிந்துதான் சாப்பிட வேண்டுமாம். இஸ்தான்பூல் துருக்கியில் கோல்டன் ஹார்ன் இஸ்சுவரி என்னும் வெளிப்புற மேல்தள ஹோட்டல், நான்கு சேர் செட்டும் அதை முழுமையாக மூடிய பெரிய கண்ணாடி பந்து போன்ற அமைப்புமாக உருவாக்கியுள்ளது. மேலும் உள்ளேயே சானிட்டஸைர் மற்றும் உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகள் என அனைத்தும் வைத்திருக்கின்றனர். இவை ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்துடன் தொடர்பு கொள்ளாத வகையிலும் அதேநேரம் சுற்றி இருக்கும் இயற்கை காட்சிகளை ரசிப்பதை தடுக்காத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, மாஸ்கோவில் கேஎஃப்சி ஹோட்டலில் டச் ஸ்கிரீன் மூலம் ஆர்டர் கொடுத்தவுடன் உள்ளே இருக்கும் சமையலறையில் இருந்து உணவுகளை ரோபோவின் கை போன்ற அமைப்பு வழங்குகிறது. முழுமையாக ரோபோக்களே சமைக்கும் தொழில்நுட்பம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறது அந்த ஹோட்டலின் உரிமையாளர் குழு. நெதர்லாந்து அம்ஸ்டர்டம் நகரில் மீடியாமெடிக் ஈடென் என்னும் பிரபல ஆடம்பர ரெஸ்டாரண்ட் ஏரி அருகே இருக்கும் தனது வெளிப்புற ஹோட்டலின் இருக்கைகள், டேபிள்களை சுற்றி பசுமை வீடு போல் கண்ணாடி அமைப்பை ஒன்றை உருவாக்கியுள்ளது.

மெழுகுவர்த்தி டின்னர், ஏரிக்கரை என எப்போதும் காதலர்களுக்கு சிறப்பான இந்த ஹோட்டலில் சர்வர்களுக்கும் முகக்கவசம் கொடுக்கப்பட்டுள்ளது. பாரிஸ் H.A.N.D என்னும் ரெஸ்டாரெண்ட் கண்ணாடி ஷீல்ட் குடுவையை அமைத்து தனித் தனியாக ஒவ்வொருவரும் தொடாமல் அமர்ந்து சாப்பிடும் படி அமைத்திருக்கிறது. இதை பிரபல பிரெஞ்சு டிசைனர் கிறிஸ்டோபே ஜெர்னிகான் வடிவமைத்திருக்கிறார். இவை ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்துவதால் உலகம் முழுக்க சுமார் 200க்கும் மேலான ஹோட்டல்கள் இந்த ஷீல்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கின்றன.தாய்லாந்து ஹோட்டல் கார்டூன் டிராகன்களையும்; இன் எ லிட்டில் வாஷிங்டன் என்னும் வெர்ஜினியா ஹோட்டலில் 1940களின் ஸ்டைல் உடை உடுத்தப்பட்ட பொம்மைகளையும் அமர வைத்து இருக்கைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரும்படி இடம் விட்டுவிட்டுள்ளனர். இதே பாணியில் ஆஸ்திரேலியா ஃபைவ் டாக் டைனிங் பிரபலங்களின் கட் அவுட்களை அமர்த்தி மீதி இடத்தில் வாடிக்கையாளர்கள் அமரும்படி இடம் விட்டிருக்கிறது. இப்படி பல உணவகங்கள் நாற்காலிகளில் பொம்மைகள், கார்டூன்களை நிரப்பி சமூக இடைவெளிகளை கடை பிடித்து வருகின்றன.இவைகளையெல்லாம் மிஞ்சும் படி மேரிலேண்ட், ஃபிஷ் டேல்ஸ் ஹோட்டல் பம்பர் டேபிள்களை பொருத்தியுள்ளன. அதாவது பெரிய டயர் வடிவ அமைப்பு. அதனுள் அமர்ந்து அந்த பம்பர் ஸ்டாண்டை உருட்டிக் கொண்டே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். யாரையும் தொட முடியாது. குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி ஒரு பம்பரில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் இப்படி எனில் சீனாவின் பிரபல பள்ளிகள் தலையில் மூன்றடி நீளமுள்ள பிளாஸ்டிக் குச்சி போன்ற அமைப்புகள், பலூன்கள் பொருத்தப்பட்ட தொப்பிகளை அணிந்து வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளன. ஒரு சில பள்ளிகள் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் முழு டேபிளையும் மறைக்கும்படியான அலுவலக கேபின்கள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. டிராசில்வேனியா நாட்டு ரோமானியன் ஷூ வடிவமைப்பாளர் கிரிகோர் லப், அரை மீட்டர் முகப்பு நீளம் கொண்ட ஷூக்களை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். பிரபல தோல் காலணிகள் உருவாக்கும் நிறுவனம் என்பதால் இந்த புகைப்படம் வெளியாகி டிரெண்டாகியதில் அவருக்கு ஆர்டர்களும் குவிகின்றன. பெல்ஜியம் டிசைனர் குழுவான Livable தனது குழு உறுப்பினர்களிடம் சமூக இடைவெளிக்கான சிறப்பான ஃபேஷன் ஒன்றை உருவாக்கும்படி கேட்க, அவர்கள் தலையில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு கூண்டு போன்ற அமைப்பை வடிவமைத்து அதை மாடலுக்கு அணிவித்து ஆளில்லா சாலைகளில் நடக்க விட்டுள்ளனர். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல் மல்டிபிளை என்னும் டிசைனிங் அமைப்பு அகலமான பாவாடை கொண்ட பெட்டிகோட்களை களமிறக்கியுள்ளது. பெரும்பாலும் அக்காலத்தில் ராயல் குடும்பத்தைச் சேர்ந்தோர் பெரிய பாவாடைகள் அணிந்ததற்கு காரணம் தேவையில்லாமல் மற்றவர் தங்களை தொடுவதைத் தவிர்க்கவே. இதுமட்டுமின்றி தேவதை போன்ற இறக்கைகள், பெரிய டொனட் போன்ற வட்டம் அமைக்கப்பட்ட உடைகள், பெரிய ஹெல்மெட் என சமூக இடைவெளியை மையமாகக் கொண்டு உலகமே வித்தியாசமாகவும், அதே சமயம் ஜாலியாகவும் யோசித்து வருகிறது!

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்


Tags : Jaliya , Is it different, Jalia, social space, lifestyle!
× RELATED ஜாலியா இருக்க எப்படியெல்லாம் யோசிக்க...