இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!

நன்றி குங்குமம்

இரண்டு ஆஸ்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பில்லியன் கணக்கில் வசூலையும் அள்ளிய அனிமேஷன் திரைப்படம் ‘கோகோ’. ஹாட்ஸ்டாரில் இலவசமாக இந்தியிலும், சந்தா செலுத்தி ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.மெக்சிகோவில் வருடந்தோறும் ‘இறந்தவர்களுக்கான தினம்’ கொண்டாடப்படுகிறது. அங்கே மரணம் என்பது துக்க நிகழ்வு அல்ல. அது ஓர் ஆன்மிக பயணம். குறிப்பாக மெக்சிகோவின் மத்தியிலும் தென் பகுதியிலும் இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாசார நிகழ்வு. இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகவே இந்த தினம். இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் இதில் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும். மெக்சிகோவில் இதற்குப் பொது விடுமுறை. இந்த வருடம் வரும் நவம்பர் 2ல் இந்த தினம் வருகிறது. இதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கோகோ’. மெக்ஸிகோவில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரும் சிறுவன் மிகுலுக்கு பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்பது கனவு.

ஆனால், அவன் குடும்பத்தில் பல தலைமுறைகளாக இசை என்ற சொல்லுக்குக்கூட தடை. மிகுலின் கொள்ளுப் பாட்டி இமெல்டா ஒரு இசையமைப்பாளனைத்தான் திருமணம் செய்திருந்தாள். அவன் இசையில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று இமெல்டாவையும் அவளின் மகள் கோகோவையும் விட்டுச் சென்றுவிட்டான். திரும்பி வரவேயில்லை. கணவன் மீதான கோபத்தில் வீட்டில் இசைக்குத் தடை போட்டுவிட்டாள் இமெல்டா. அதிலிருந்து அவர்களின் குடும்பத்தில் இசையின் சத்தமே இல்லை. இப்போது மிகுலின் குடும்பம் காலணி தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. இமெல்டாவின் மகளும் மிகுலின் பாட்டியுமான கோகோ அவர்களுடன்தான் இருக்கிறாள். கோகோவிற்கு ஞாபக மறதி. சரியாகப் பேச வராது. அவளுக்கு ஆதரவாக மிகுல் இருக்கிறான். யாருக்கும் தெரியாமல் இறந்துபோன இசையமைப்பாளர் எர்னஸ்டோவின் பழைய இசை நிகழ்ச்சிகளைப் பார்த்து கிதார் வாசிக்க கற்றுக்கொள்கிறான் மிகுல். இறந்தவர்களுக்கான தினம் வருகிறது.

அப்போது மிகுல் செய்யும் சிறு தவறால் இறந்தவர்களின் உலகத்துக்கு அனுப்பப்படுகிறான். அங்கே பூமியில் புகழ்பெற்ற பலரைச் சந்திக்கிறான். இறந்தவர்கள் அந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்றால் பூமியில் யாராவது ஒருவராவது அவர்களை நினைக்க வேண்டும். அப்படி யாருமே நினைக்கவில்லை என்றால் இறந்தவர்கள் அந்த உலகத்தில் இருந்தும் அகற்றப்படுவார்கள். இறந்தவர்களின் உலகத்தில் இசையில் ஆர்வமுடைய தனது தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் மிகுல். அவரைப் பற்றிய உண்மைகள் எப்படி மிகுலின் குடும்பத்துக்குள் மறுபடியும் இசையைக் கொண்டு வருகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். அனிமேஷன் துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய பாய்ச்சலாக இந்தப் படத்தைச் சொல்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லீ அன்க்ரிச்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories:

>