நீர் இளைஞர்கள்!

நன்றி குங்குமம்

அன்று தீண்டாமையின் குறியீடாக இருந்த ஊர் பொதுக் கிணறுகளை இன்று இந்த இளைஞர்கள் சமத்துவ நீர்நிலையாக மாற்றி வருகிறார்கள்! ‘‘அந்தக் காலத்துல கிராமங்களின் தண்ணீர் தேவையை ஊர் பொதுக் கிணறுகள்தான் பூர்த்தி செய்தன. வறட்சிக் காலங்கள்ல கூட அந்தக் கிணறுகள்ல தண்ணீர் இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. அந்தக் கிணறுகள்தான் ஊர் கூடிப் பேசும் இடமாகவும் இருந்துச்சு. பெண்கள் தங்கள் வீட்டுக் கதைகளைப் பேசிக்கிட்டே தண்ணீர் இறைப்பாங்க. ஊர்ப் பஞ்சாயத்துகள் நடக்கிறப்ப அந்தக் கிணறு களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அதன்மீது சத்தியம் செய்வாங்க. அதன்வழியா, நீதியும் உண்மையும் காக்கப்பட்டிருக்கு. ஆனா, ஒரு கட்டத்துல அந்தப் பொதுக் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாகி, இன்னைக்கு இல்லாமலேயே போயிடுச்சு. இருந்தும் ஏதோ ஒருவகையில் கிணறுகள் நம் பால்ய கால நினைவுகளுடன் இன்னும் ஒட்டிக்கிட்டுதான் இருக்கு…’’ மனம் நெகிழ்ந்து பேசுகிறார் ‘குக்கூ’ சிவராஜ். இவரின், ‘குக்கூ’ குழந்தைகள் அமைப்பு கிராமங்களில் இருந்த அந்த ஊர் பொதுக் கிணறுகளை புனரமைப்பு செய்யும் பணியை கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புளியானூர் கிராமத்தில் இரண்டு ஊர்க்கிணறுகளைப் புனரமைப்பு செய்துள்ள இவரின் அமைப்பு, இப்போது மூன்றாவதாக திருவண்ணாமலை மலையடிவாரத்திலுள்ள ஆடையூர் என்ற கிராமத்துக் கிணற்றை புனரமைப்பு செய்து வருகிறது. இதற்காகவே ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ என்றொரு அமைப்பையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார் சிவராஜ். ‘‘இந்த இயக்கத்தை நாங்க போன வருஷம்தான் ஆரம்பிச்சோம். இப்படியொரு இயக்கத்தை முன்னெடுக்கக் காரணம், எங்களை ரெண்டு விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பாதிச்சதுதான்.

முதல் விஷயம் ஹரித்துவாரைச் சேர்ந்த 34 வயதான சாது நிகமானந்தா இறப்பு. இவர், கங்கை நதியின் தூய்மையைக் காப்பதற்காக 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அணுவணுவாகத் தன்னை மாய்த்துக்கொண்டவர். இவர் இறந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகே இவர் பற்றின விஷயங்களைப் படிக்க நேர்ந்தது. அவருடைய இருப்பும் இல்லாமையும் எங்களைச் சலனப்படுத்துச்சு. இந்தச் சூழல்லதான் தண்ணீரைக் காப்பதற்கான எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தத் தீர்மானிச்சோம். இதன்பிறகு அனுபம் மிஸ்ராவின், ‘குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு’ நூலாக வந்தது. வடமாநிலங்கள்ல இந்நூலை அச்சிட்டுக் கொடுப்பதையே பெரிய புண்ணியமா நினைக்கிறாங்க. ஒரு சொட்டு நீர் எவ்வளவு முக்கியமானதுனு இந்நூலிலிருந்து தெரிய வந்துச்சு. இவங்க ரெண்டு பேரும்தான் எங்களுக்கு ஆதர்சமா இருந்தாங்க. உடனே, நீர் சார்ந்து செயலாற்றணும்னு தீர்க்கமா முடிவெடுத்தோம்...’’ என்கிற சிவராஜ், கிணறுகளைத் தேர்ந்தெடுத்த  காரணத்தைச் சொல்கிறார்.  ‘‘இன்னைக்கு ஏரி, குளம், குட்டைகளை தூர்வாருதல் ஒரு பெரிய இயக்கமா நடந்திட்டு இருக்கு. ஆனா, இதுல கிணறு என்பது அப்படியே விடப்பட்டு இருக்கு. இதுக்கு ஒரு காரணம் கிணறு பத்தி நிறைய மூடநம்பிக்கைகள் சமூகத்துல நிலவுறதுதான். அந்த மூடநம்பிக்கையாலயே கிணற்றின் நீர்ச்சுரப்பை மணல் போட்டு மூடி அடைச்சிடுறாங்க. பிறகு, அது மேல கட்டடம் கட்டுறாங்க. அப்புறம், கிணற்றுத் தண்ணீர் தீண்டாமைக்கான ஒரு குறியீடாகவும் இருக்குது. அன்னைக்கு கிணற்றுல தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுச்சு.

இப்ப வரைக்கும் அங்கங்க இந்த விஷயங்கள் இருக்குது. இருந்தும் ஊர்க்கிணறுதான் தண்ணீர் தாகத்தை போக்கியது. இந்தச் சித்திரம்தான் எங்கள கிணற்றுப் பக்கம் ஈர்த்தது. இதையெல்லாம் சரிப்படுத்தணும்னு நினைச்சோம். முதல்ல, அந்தக் கிராமத்துல முழுக்க சிதிலமாகி நீர்ச்சுனை அடைக்கப்பட்டு கிடக்கும் கிணற்றை சுத்தமாக்கி ஆழப்படுத்துறோம். அடுத்து அதன் சுற்றுச் சுவரைக் கட்டுறோம். பிறகு, கிணற்றைச் சுற்றி ஓவியங்கள் வரையிறோம். ஊர் மக்களை அந்தக் கிணற்றுடன் தொடர்புபடுத்தவே இப்படியான ஓவியங்கள். அந்த ஊர்ல ரெண்டு குறிப்பிட்ட சமூக மக்கள் இருந்தா அதுல ஒரு சாதியைச் சேர்ந்தவங்க மட்டும் கிணற்றைப் பயன்படுத்தும் நிலை இருக்கும். ஆனா, நாங்க ரெண்டு சாதிக்காரங்களையும் அதுக்குள்ள கொண்டு வருவதை பேசிப் பேசி செய்றோம். அந்த ரெண்டு மக்களையும் பங்கெடுக்க வைக்கிறோம். மதங்கள் சார்ந்து இருந்தா அது சார்ந்தே செய்றோம். இப்ப ஒரு ஊர்ல கிறிஸ்துவர்களும், இந்துக்களும் அதிகமா இருந்தா ரெண்டு மத வழிபாட்டையும் செய்தே கிணற்றுப் பணியை ஆரம்பிக்கிறோம். கிறிஸ்துவ மக்கள் அதிகமுள்ள இடங்கள்ல இருக்குற கிணறா இருந்தா அங்கே ஜெபம் பண்ணுவோம். இந்துக்கள் பகுதியா இருந்தா சிவனடியார்களை வைச்சு தேவாரம், திருவாசகம் பாடி ஆரம்பிப்போம். இந்தப் பணிக்கு முதல்ல மக்கள் வரத் தயங்குவாங்க. அப்புறம், சின்னதா விமர்சனங்கள் வைப்பாங்க. அங்கிருக்கிற பெரியவங்க, நாங்க வேலை செய்யத் தொடங்கினதும் பல்வேறு கதைகளை எடுத்து விடுவாங்க. பிறகு எல்லோரும் இணைவாங்க. இப்படித்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துல புளியானூர்னு ஒரு கிராமத்துல ரெண்டு கிணறுகளை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கோம்.

இப்ப திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள ஆடையூர் கிராமத்துல வேலை செய்திட்டு வர்றோம்...’’ என்கிற சிவராஜைத் தொடர்ந்தார் ஆடையூர் கிராமத்தில் தூர்வாரும் பணியை முன்நின்று செய்யும் கிருஷ்ணமூர்த்தி. ‘‘எங்க கிராமத்துல எட்டு கிணறுகள் இருந்துச்சு. இது காமராசர் ஆட்சிக் காலத்துல எங்க ஊர் ஊராட்சி மன்றத் தலைவரா இருந்த ஐயா தனபாலன் உருவாக்கினது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாடி தொண்ணூற்று நான்கு வயசுல அவர் இறந்தார். பல ஊர்கள்ல இருந்தும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினாங்க. அப்பதான் அவர் செய்த பணிகள் எனக்குத் தெரிஞ்சது. அவருக்குச் சொந்தமா இரண்டு கிராமங்கள்ல அறுபது ஏக்கர் நிலம் இருந்துச்சு. ஆனா, அவர் சாகும்போது துண்டு நிலம்கூட கிடையாது. அவர் ஊராட்சி மன்றத் தலைவரா சிறு சிறு தண்ணீர்க் குட்டைகளையும், எட்டு கிணறுகளையும் எங்க பகுதியில அமைச்சுக் கொடுத்திருக்கார். இதுல மூணு கிணறுகள் ஆதிதிராவிடர் பகுதியிலும், மீதி அஞ்சு கிணறுகள் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதியிலும் அமைச்சிருக்கார். இப்ப அதுல நாலு கிணறு முழுவதும் அழிஞ்சுபோச்சு. பஞ்ச காலங்கள்லயும் வறட்சி நேரங்களிலும் இந்தக் கிணறுகள் எங்க கிராமத்துக்கு பெருந்துணையா இருந்திருக்கு. அதனால, இப்ப ‘குக்கூ’ அமைப்பு மூலம் மீதமுள்ள கிணறுகளின் கடைசி உயிர்த்துடிப்பை தக்கவைக்கணும்னு வேலையைத் தொடங்கியிருக்கோம்...’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

‘‘இந்தப் பணியை நண்பர்கள் வட்டம் மூலமா செய்திட்டு வர்றோம். குறிப்பா, ‘நம்மால் முடியும்’, ‘அகர்மா’னு ரெண்டு நண்பர்கள் குழுவினர் நிறைய பங்களிப்பு செய்திட்டு வர்றாங்க...’’ என்கிற சிவராஜ், ‘‘இப்ப இந்தத் திட்டத்துல கூகுள் மேப் மூலம் தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கிணறுகள் இருக்குதுனு ஒரு பரந்துபட்ட தேடலை ஆரம்பிச்சிருக்கோம். உதாரணத்துக்கு, உங்க ஊர்ல ரெண்டு கிணறு இருக்குனா அதைக் கணக்கு எடுக்குறோம். அடுத்து, தூர்ந்து போன கிணறுகளின் நிலையைப் பார்த்து பிரிக்கிறோம். பிறகு, அந்தந்த ஊர்கள்ல உதவி செய்ய முன்வரும் நண்பர்களுடன் கைகோர்த்து கிணறுகளை தூர்வாரி சரி செய்யப் போறோம். இப்போதைக்கு கோவையில ரெண்டு கிணறுகளும், ஈரோட்டுல ஒரு கிணறும், செங்கம் பக்கத்துல ஒரு ஊர்லயும் தூர்வாரி சரிசெய்ய திட்டம் வகுத்திருக்கோம். இந்த வேலையைச் செய்யும்போது அதைத் தொழில்நுட்பமா ஆவணப்படுத்தவும் இருக்கோம். ஏன்னா, இதை வருங்கால சந்ததியினர் எப்படி செய்திருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம்...’’ என்கிறார் சிவராஜ் நம்பிக்கை துளிர!  

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

Related Stories:

>