×

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு இயக்கப்படுமா?... சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு அருகில் வட்டக்கோட்டை என்ற பழங்காலத்து கடல் கோட்டை அமைந்துள்ளது. கிபி 18ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் கடற்கரையை ஒட்டி இந்த கோட்டை கட்டப்பட்டது. எதிரி நாட்டில் இருந்து கடல் வழியாக படையெடுத்து வரும் கப்பல்களை கண்காணிப்பதற்காகவும், கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை பிற்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து தங்கி செல்லும் இடமாகவும், ராணுவ வீரர்கள் தங்கி கடலை கண்காணிப்பதற்கான கோட்டை கொத்தளமாகவும் வட்டக்கோட்டை இருந்து வந்தது.

இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும், ராணுவ தளமாக இருந்த கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த கோட்டையின் மீது ஏறி நின்று பார்த்தால் குமரி கடலில் பெரும் பகுதியை பார்க்க முடியும். இதனால் இந்த பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்பட்டது. கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ளதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் வட்டக்கோட்டைக்கு செல்வதையும் தவிர்ப்பது இல்லை. கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு போக்குவரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடல் மார்க்கமாக சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க வேண்டும். இந்த படகு சேவை தொடங்கப்படும்  பட்சத்தில் வட்டக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக உயரும். இதன்மூலம் அரசுக்கும்  கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் நேரில் பார்த்து செல்வதற்காக தமிழக அரசால் படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படகை கடல் மார்க்கமாக சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டக்கோட்டை வரை இயக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Vattakottai ,Kanyakumari , Will there be a ferry service from Kanyakumari to Vattakottai?
× RELATED கன்னியாகுமரியில் விவேகானந்தர்...