×

மேலப்பாளையம் சந்தை மீண்டும் மூடல்: கோழி விற்பனை மட்டுமே நடந்தது

நெல்லை: சமூக இடைவெளி பிரச்னை காரணமாக மேலப்பாளையம் சந்தை மீண்டும் மூடப்பட்டது. இதனால் சந்தை சாலையில் கோழி வியாபாரிகள் மட்டுமே இன்று விற்பனையை நடத்தினர். தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை ஆகியவற்றில் ஆடுகள் விற்பனை எப்போதுமே அதிகமாக நடக்கும். கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டு சந்தைகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. நெல்லை, தூத்துக்குடியின் ஆடு, மாடு விற்பனையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையான மேலப்பாளையம் சந்தையில் ஏப்ரல், மே மாதங்களில் எந்தவொரு விற்பனையும் நடக்கவில்லை.

ஜூன் மாதத்திற்கு பின்னர் மேலப்பாளையம் சந்தை சாலையில்  செவ்வாய்கிழமை தோறும் கோழி விற்பனை மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தளர்வு காரணமாக கடந்த 6ம் தேதியன்று சந்தை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் திரளாக பங்கேற்றதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. அதிகாரிகள் வலியுறுத்தியும் பலர் முக கவசம் அணிந்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்னமும் சிறிதுகாலத்திற்கு சந்தையை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்பேரில் மேலப்பாளையம் சந்தை இன்று திறக்கப்படவில்லை.

வழக்கம்போல் கோழிகள் விற்பனை மட்டும் சந்தை சாலையில் நடந்தன. ஒரிரு வியாபாரிகள் ஆடுகளை சிறிய வாகனத்தில் கொண்டு வந்து, வாகனத்தில் இருந்தபடியே விற்பனை செய்து சென்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சந்தைகள் திறந்துவிட்ட சூழலில், மேலப்பாளையம் சந்தையையும் விரைந்து திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

Tags : Upper Palaiyam , Upper Palaiyam market closed again: only chicken sales took place
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்கும்