×

திருவனந்தபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: பெண்கள் உட்பட 9 பேர் சீரியஸ்

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வாளையாறு செல்லங்காவு பழங்குடி காலனியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாளையாறு செல்லங்காவு பழங்குடி காலனியை சேர்ந்தவர் ராமன் (61). அவரது உறவினர் சிவன் (37), சகோதரர் மூர்த்தி (28), மற்றொரு உறவினர் ஐயப்பன் (58), அவரது மகன் அருண் (25). சிவன் கடந்த சனிக்கிழமை பிற்பகல் கள்ளச்சாராயம் வாங்கி வந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள், பக்கத்தில் உள்ளவர்கள், பெண்கள் உள்பட சிலர் சேர்ந்து குடித்துள்ளனர்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடித்துவிட்டு இரவு அவரவர் வீட்டுக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் ராமன் மறுநாள் காலை சுமார் 8.30 மணிக்கு இறந்தார். அது இயற்கை மரணம் என்று கருதி, போலீசாருக்கு தெரியபடுத்தாமல் சடலத்தை தகனம் செய்து உள்ளனர். இதையடுத்து மதியம் ஐயப்பனும் மயங்கி விழுந்து இறந்தார். அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவன் மட்டும் மருத்துவமனைக்கு செல்லவில்லை.

அவர் வீட்டில் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூர்த்தி, அருண் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். தற்போது 4 பெண்கள் உள்பட 9 பேர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக இறந்ததும், 9 பேர் மருத்துவமனையில் சீரியசாக இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruvananthapuram , In Thiruvananthapuram, counterfeiting, 5 people killed, 9 people serious
× RELATED தி.மலை ஏடிஎம்மில் செல்லாத ரூ.500 நோட்டு:பெண் அதிர்ச்சி