×

பெண்களை அவமரியாதையாக பேசக்கூடாது: கமல்நாத் பேச்சுக்கு ராகுல் காந்தி அதிருப்தி

வயநாடு: மத்திய பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதாகட்சி வேட்பாளர் இமர்தி தேவியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தரக்குறைவாக பேசியதற்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் இமர்தி தேவி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர். கடந்த மார்ச் மாதம், கமல்நாத்துக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தியபோது, அவருடைய ஆதரவாளர்களான இமர்தி தேவி உள்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பாஜவில் சேர்ந்தனர். அதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவ. 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், குவாலியர் மாவட்டம் டாப்ரா (தனி) தொகுதியில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். அத்தொகுதியில் பிரசாரம் செய்த கமல்நாத்; தங்கள் கட்சியின் வேட்பாளர் மிகவும் எளிய நபர் என்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் அமைச்சர் இமர்தி தேவி போல் தரக்குறைவானவர் அல்ல என்றும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் கூறியிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பியும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண்களை யாரும் அவமரியாதையாக பேசக்கூடாது என்று கூறினார். கமல்நாத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது பேச்சை தான் விரும்பவில்லை என்றும், இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.


Tags : Women ,speech ,Rahul Gandhi ,Kamal Nath , Women should not speak disrespectfully; Kamal Nath's speech is unfortunate: Rahul Gandhi is dissatisfied with Kamal Nath's speech
× RELATED பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து...