உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் 2 நாளில் 14 பேருக்கு தூக்கு, 20 பேருக்கு ஆயுள் தண்டனை : உள்துறை கூடுதல் செயலர் தகவல்

லக்னோ, :உத்தரபிரதேசத்தில் ‘மிஷன் சக்தி’ பிரசாரத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கடந்த 2 நாட்களில் 14 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின் பேரில், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ‘மிஷன் சக்தி’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கடந்த 2 நாட்களில் பாலியல், பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவ்னிஷ் குமார் அவஸ்தி கூறுகையில், ‘பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை தண்டிப்பதற்காக மிஷன் சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட பாலியல் வழக்குகள் நீதிமன்ற தீவிர விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டன. இதில், 11 வழக்குகளில் 14 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு 5 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், குற்றம் சாட்டப்பட்ட 22 பேருக்கு 8 வழக்குகளில் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 88 வழக்குகளில் பெண்கள் மற்றும் சிறுவர் குற்றங்களில் ஈடுபட்ட 117 குற்றவாளிகளின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதுகுறித்து ஏடிஜி (அரசு தரப்பு) அசுதோஷ் பாண்டே கூறுகையில், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை பெற்று தருவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணை குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டதால், இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக தீர்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த வசதியாக அக். 17 முதல் 25ம் வரை மிஷன் சக்தி பிரசாரத்தை மாநில அரசு தொடங்கியது. இதன் கீழ், குற்றவாளிகளைத் தண்டித்தல் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.

Related Stories: