×

டெல்டாவில் பலத்த மழை: 10,000 ஏக்கர் பயிர் மூழ்கியது

தஞ்சை,:-தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. தஞ்சையில் 3வது நாளாக மழை பெய்ததால் சுமார் 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று மாலை மற்றும் இரவில் பரவலாக பலத்த மழை பெய்தது.   திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது.  

பின்னர் அதிகாலை வரை மழை தூறிக்கொண்டிருந்தது. இதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.  மழையால்  தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையம், அன்னப்பன்பேட்டை, ராமநாதபுரம், ஆலக்குடி, கறம்பை, கோயிலூர், திருவையாறு, ஒரத்தநாடு  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.  இளம் நாற்றுகளாக உள்ளதால் அழுகி விடும் அபாயம் உள்ளது.  இதுபோல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 2ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் மழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதிகளில் சம்பா நடவு செய்து சில நட்களே ஆகிறது. ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் செலவு செய்துள்ளோம்.கிராமங்களில் வாய்க்கால்களை தூர்வாராததால் கோரைகள் மண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவ மழை துவங்குவதற்கு முன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீரை வடிய வைத்து வருகிறோம். தண்ணீர் வடிந்தாலும் கூடுதலாக மேலும் உரம்  தெளிக்க வேண்டும். இதனால் கூடுதல் செலவாகும். எனவே உடனடியாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

இதேபோல்  வண்ணாரப்பேட்டை, பூக்குளம், மாரியம்மன்கோயில், கொல்லாரை, அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில்  விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் குவியல்  15 நாட்களுக்கு மேலாக தேக்கமடைந்துள்ளன. மழையால் நெல்லும் நனைந்து வருகிறது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று மேகமூட்டமாக காணப்பட்டது.புதுக்கோட்டையில் நேற்றிரவு மழை பெய்தது. பொன்னமராவதியில் நேற்றிரவு 11 மணி அளவில் மழை பெய்தது. இதேபோல் திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை பெய்தது.

திருச்சியில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.  பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் பகுதிகளிலும் இரவு கன மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலையும் மழை பெய்தது.


Tags : delta , In the delta, heavy rains submerged 10,000 acres of crops
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு