99 சதவீதம் இந்தியா போஸ்ட் பேமென்ட் கணக்குகளுடன் ஆதார் எண்கள் இணைப்பு

சென்னை: இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் (ஐபிபிபி) 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. வங்கியில்லாத மற்றும் வங்கி சேவை எளிதில் கிடைக்காத மக்களுக்கு இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் 3.6 கோடிக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இதேபோல், ஆதார் கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஐபிபிபி கணக்குடன் ஆதாரை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, இதுவரையில் 99 சதவீதம் ஐபிபிபி கணக்குகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐபிபிபி மூலம் மொத்தமாக ₹38 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி பரிவர்த்தனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவ்வங்கி 1 கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதேபோல், மொத்த வைப்புத்தொகை ₹303 கோடியிலிருந்து ஐந்து மடங்கு அதிகரித்து ₹1,558 கோடியாக உள்ளது. இதுவரையில் 99 சதவீதம் கணக்குகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது  வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பென்சன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது. மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால் கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் சிறப்பு முகாம்களை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: