மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைகிறது: BECA ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா-அமெரிக்கா ஆர்வம்

டெல்லி: இந்தியா-அமெரிக்கா- ஜப்பான் நாட்டு கடற்படையினர் இடையேயான கூட்டு பயிற்சியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவையும் பங்கேற்க செய்து சீனாவின் அத்துமீறல்களுக்கு செக் வைத்திருக்கிறது இந்தியா. 1992 முதல் ஆண்டு தோறும் அமெரிக்கா- ஜப்பான்- இந்திய கடற்படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வங்காள விரிகுடா பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சி மலபார் கூட்டு பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தொடர் அத்துமீறல்களால் தெற்கு சீன கடல் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் வங்காள வளைகுடாவில் நடைபெற உள்ள மலபார் கூட்டு பயிற்சியில் அமெரிக்கா- ஜப்பான்- இந்திய கடற்படைகளுடன் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைய இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது தவிர அக்டோபர் 26, 27-ம் தேதிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளியுறவு பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக BECA எனப்படும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.

ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்காவின் நவீன போர் நுட்பங்களை பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி கிடைக்கும். இந்தியாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கை லடாக் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories: