×

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திருப்பணி: வேகப்படுத்த வலியுறுத்தல்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில், 5 ஆண்டுகளுக்கு மேலாக மந்த கதியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகளை வேகப்படுத்தி விரைவில் கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா எடுக்கப்படும். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோயில் கட்டிடம் கடந்த சில ஆண்டாக பழுதாகி காணப்பட்டது. பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டு பாலாலயம் செய்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்நிலையில், மூலவர் அம்மன் சன்னதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக திருப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அம்மன் சன்னதி அகற்றப்பட்டது. மீண்டும் கடந்தாண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ராசிபுரத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, சிற்பங்கள் செதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் 50 சதவீத பணிகளே மட்டும் முடிந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: சேலத்தில் எட்டுபேட்டையை கட்டியாள்பவள் கோட்டை மாரியம்மன். அலுவலகம் செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோட்டை மாரியம்மனை தரிசித்து விட்டு தான் செல்வார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோயில் கட்டிடம் பழுதானதால், 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அம்மன் சன்னதிக்கு எதிரே சிறிய சன்னதி கட்டப்பட்டு, தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. பக்தர்கள் மூலவர் அம்மனை தரிசனம் செய்து ஐந்து ஆண்டுகளாகிறது. எனவே, திருப்பணியை வேகப்படுத்தி, அடுத்த 2021ம் ஆண்டு ஆடித்திருவிழாவுக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

Tags : Salem Fort Mariamman Temple , Salem Fort Mariamman
× RELATED 30 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்