பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச IAS தேர்வு பயிற்சி மையம்!

நன்றி குங்குமம்

‘கல்யாணராமன்’ படத்தில் கமலுக்கு இரட்டை வேடங்கள். அதேபோல நாம் சந்தித்த கல்யாணராமனுக்கும் இரண்டு முகங்கள். ஒன்று இலக்கியம். இன்னொன்று அரசு அதிகாரி.இயற்பெயர் இரா.இராமன். இலக்கியப் படைப்புகளுக்காக கல்யாணராமன். ‘கனல்வட்டம்’ என கவிஞர் ஆத்மாநாம் பற்றிய விமர்சனப் புத்தகம், 3 கவிதைத் தொகுதிகள் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட ‘விபரீத ராஜயோகம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரது இலக்கிய ஆளுமைக்கு சாட்சியம். தவிர, 24 வருடங்களாக அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். அண்மையில் சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியின் முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார். கையோடு தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்துக்கான முதல்வராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். அவரிடம் இந்த மையத்தின் பணிகளைக் குறித்துக் கேட்டோம். ‘‘தமிழக அரசு 1966ல் பட்டியலின மாணவர்களுக்காக ஒரு முன் தேர்வு மையத்தை அமைத்தது. அதேபோல பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக 1971ல் ஒரு சிறப்புத் தேர்வு பயிற்சி மையத்தையும் ஆரம்பித்தது. 2000ல் இந்த இரண்டையும் ஒன்றிணைத்து உருவானதுதான் ‘ஆல் இந்தியா கோச்சிங் சென்டர்’. இது சென்னை அண்ணா நகரில் 2012ம் வருடம் வரை இயங்கியது. அதன்பிறகு கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அண்ணா மேலாண்மை மையத்தின் கீழ் ‘இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்’ என்னும் பெயரில் இயங்கி வருகிறது...’’ என்கிற இராமன் குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

‘‘இந்த மையம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதல் மே வரை முதல் நிலைத் (ப்ரிலிம்ஸ்) தேர்வுக்கான பயிற்சியையும், ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் முதன்மை (மெயின்) தேர்வுக்கான பயிற்சியையும் வழங்கி வருகிறது. இப்போது கொரோனா பிரச்னைகளால் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை எடுக்க வேண்டிய நிலை. இதற்கும் வரவேற்பு கிடைப்பதால் ஆன்லைனிலேயே வகுப்புகளை இப்போதைக்கு தொடர்கிறோம். இதில் எல்லோரும் கலந்துகொள்ளலாம். கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டபிறகே நேரடி பயிற்சிகள் ஆரம்பிக்கும். நேரடி பயிற்சியில் முதல் நிலைத் தேர்வுக்கு முழுநேர மாணவர்களாக 225 பேர், பகுதி நேர மாணவர்களாக 100 பேர் மற்றும் மீன்வளத்துறையிலிருந்து 20 பேர் என மொத்தம் 345 பேருக்கு பயிற்சி அளிக்கிறோம். முழுநேர மாணவர்களுக்கு உணவும், தங்குமிடமும் இலவசம். இந்த 345 மாணவர்களில் அதிகம் பேர் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதுபோக மாற்றுத்திறனாளிகள், இஸ்லாமியர்களும் இதில் அடக்கம். கிராமத்து மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி மையம் ஒரு வரப்பிரசாதம்...’’ என்கிற இராமன் பயிற்சி மையத்தின் மற்ற சிறப்புகளையும் விவரித்தார்.

‘‘அரசு, தனியார் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் திறமையான ஐஏஎஸ் அதிகாரிகளால் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் படிப்பு அறைகளும் இங்கே உண்டு. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்று தில்லியில் ஆளுமை தேர்வுக்குப் போகிற மாணவர்களுக்கும் இங்கேயே பயிற்சியும் பயணத்துக்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதேபோல் முதல் நிலைத் தேர்வில் இங்கே படித்து வெற்றிபெறும் மாணவர்களோடு தமிழ்நாட்டில் தேர்வாகும் மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 225 பேருக்கு முதன்மை (மெயின்) தேர்வுக்கான 3 மாத பயிற்சியும் கொடுக்கிறோம். இந்த மூன்று மாதத்துக்கு உதவித் தொகையும் உண்டு. இருவகையான பயிற்சிகளுக்கும் மாணவர்களை ஒரு நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்கிறோம். மாணவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு பயிற்சி மையத்தை மெருகேற்றுவதால் இது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது ...’’ என்கிறார் இராமன்.  

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories: