கொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்!

நன்றி குங்குமம்

2012ல் இதன் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 600 கோடி...

கொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்!

வாடகைத் தாய் என்ற சொல் இந்திய மொழிகளின் அகராதிகளில் இடம் பெற்று கால் நூற்றாண்டாகிவிட்டது. பெண் உடல் தீட்டுக்குரியது, அசுத்தமானது, பாவமானது என்று இருந்த பழைய சிந்தனைகளை எல்லாம் நவமுதலாளித்துவமும் உலகமயமாக்கப்பட்ட மருத்துவ வணிகமும் மாற்றியமைத்தன. பெண் உடல் தீட்டல்ல, பணம்; கர்ப்பப்பையோ அவளின் கருமுட்டையோ குப்பையல்ல, காசு என்ற புதிய நீதி பிறந்தது. இந்திய சமூகம் சத்தமின்றி அதன் பின்னே செல்லத் தொடங்கிவிட்டது. ஓரிரு தசமங்களுக்கு முன்பு வரை சமூக வளர்ச்சியைக் காரணம் காட்டி, குழந்தைப் பேற்றை நிறுத்திக்கொள்ளச் சொல்லி பிரசாரம் செய்த நாடு இது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று இப்படி வணிகம் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வாடகைத் தாய் முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்கள் என்னென்ன; அதில் இந்தியாவின் பழைய சமூக அமைப்புகள் நிகழ்த்தும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்ப்போம். உலக மருத்துவச் சுற்றுலா என்ற பொருளாதார ஏற்பாட்டை வலுப்படுத்தும் விதமாக பெரும்பாலான நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள் தங்கள் வாடகைத் தாய் கொள்கைகளை இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் மறுசீரமைப்பு செய்தன. அப்படித்தான் இந்தியாவும் 2002ம் ஆண்டு வாடகைத் தாய் என்பதை சட்டரீதியாக அங்கீகரித்தது. மருத்துவம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற நோக்கங்களோடு இந்தியாவுக்கு வரும் அந்நியர்கள் விவகாரங்களில் அரசு எந்தவகையான தொந்தரவும் தரக்கூடாது என்பதோடு, அவசியப்பட்டால் அவர்களுக்கு உதவியும் செய்ய வேண்டும் என்பதாய் அந்தச் சட்டம் இருந்தது.2012ம் ஆண்டு இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) வெளியிட்ட அறிக்கையின்படி இந்த சந்தான பாக்கியத் தொழிலின் மொத்த மதிப்பு அப்போதைய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயிலேயே 11 ஆயிரத்து 600 கோடி.

அப்போதே சுமார் 600 மருத்துவமனைகள் அரசு அங்கீகாரம் பெற்றவையாகவும் சுமார் 400க்கும் மேற்பட்டவை அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்குபவையாகவும் இருந்தன. அந்த ஆண்டு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குழந்தைப் பேற்றுக்காக இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்களில் பெரும்பகுதியினர் கணவர் அல்லது மனைவியின் துணையற்ற, தனியர்கள் மற்றும் க்யூர் எனப்படும் திருநர்கள். குறைவான கட்டணம், மிகுந்த திறனுள்ள ஆங்கிலம் நன்கறிந்த மருத்துவர்கள், குறைந்த கட்டணத்துக்கு வாடகைத் தாயாகப் பணியாற்ற விருப்பமுள்ள பெண்கள் அபரிமிதமாகக்  கிடைப்பது, வாடகைத் தாய் விவகாரத்தில் சட்டத்தை எளிதாக வளைக்க சாத்தியமுள்ள பலவீனமான சமூக அமைப்பு போன்றவையே அந்நியர்கள் இந்த விஷயத்துக்காக இந்தியாவுக்குப் பறந்து வருவதன் அடிப்படைக் காரணங்கள். ART (Assisted Reproductive Technologies) எனப்படும் இந்த செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பங்களை முறைப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் ஒரு சட்டக் கையேட்டை முன்வைத்தது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறையின் மேற்பார்வையோடு வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டில் இப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான சிக்கல்களுக்கு சரியான தீர்வுகள் இருக்கவில்லை. இதை அப்போது புகழ்பெற்ற சில வழக்குகள் அம்பலப்படுத்தின. மறுபுறம் இந்த ART என்னும் செயற்கைக் கருவூட்டல் தொழில் நிறுவனங்களில் பங்குகளை முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கொடுத்த நெருக்கடியின் பலனாக இதற்கு ஒரு சட்டவடிவு கொடுக்க அரசு முன்வந்தது. மேற்சொன்ன இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறையின் மேற்பார்வையில் செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பச் சட்டத்துக்கான மாதிரி வரைவு 2008ல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து 2010 மற்றும் 2013ம் ஆண்டில் இவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. முதல் இருமுறையுமே இந்தச் சட்டவரைவுகளில் இருந்த கார்ப்பரேட் நலன்களுக்காகவும் வாடகைத் தாயாகப் பணிபுரிய முன்வரும் பெண்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் பற்றிய போதிய அக்கறையின்மைக்காகவும் இந்தச் சட்டவரைவுகள் கண்டிக்கப்பட்டன.இந்த 2013ம் ஆண்டு சட்டம் வாடகைத் தாய் விசாக்களை கட்டுப்படுத்தியதால் இந்தத் தொழிலின் பெரும்பகுதி மூலதனம் உடனடியாக  நேபாளத்தை நோக்கி நகர்ந்தது. நேபாளத்தில் வாடகைத் தாய் முறைக்கு சட்டரீதியான தடை இருந்தாலும் அது நேபாளக் குடிமகள்களுக்கே பொருந்தும் என்பதால், இங்கிருந்து நம் பெண்கள் அங்கு பறந்துபோய் வாடகைத் தாயாக இயங்க முடிந்தது. தொடர்ந்து உலகம் முழுதும் நேபாளம், தாய்லாந்து போன்ற நாடுகள் இந்த வாடகைத் தாய் நடைமுறைக்கு சட்டத் தடை விதித்தன. 2016ம் ஆண்டு நம் அரசு இந்திய வாடகைத் தாய் சட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன்படி, வணிகநோக்கில் வாடகைத் தாய் அமர்த்தப்படுவதும், வெளிநாட்டினர் இந்த முறையைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் வாடகைத் தாயாக அமர்த்தப்படும் பெண்கள் சுரண்டப்படுவதும், அவர்களுக்குப் போதுமான பணச் சலுகைகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவதும்தான் இதன் பிரதான காரணம். வாடகைத் தாயாக வரும் பெண்களில் பெரும்பகுதியினர் ஏழைப் பெண்கள். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள். சமூகரீதியாகச் சொன்னால் தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வறுமையின் கொடுமை தாங்காமலும் கடன் தொல்லை தாங்காமலும் வாழ வழியில்லாமலுமே பெரும்பாலும் இந்தப் பணிக்கு வருகிறார்கள்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Related Stories: