சட்டப்பேரவை தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல தமிழர்களின் உரிமைகளை காக்கும் பெரும் போர்: திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழர்களை, தமிழர்களின் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு: ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் இது. இத்தகைய ஊழல்கள், முறைகேடுகள், கொள்ளைகளில் மூழ்கிக் கிடப்பதால்தான் மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாட்டுக்கான அனைத்து உரிமைகளையும் அடகு வைக்கிறது எடப்பாடி அரசு. ஏனென்றால் அவர்களது கழுத்து, மத்திய அரசாங்கத்தின் கையில் சிக்கி உள்ளது. இவர்களிடம் உண்மை இருந்தால்-நேர்மை இருந்தால்-மத்திய அரசிடம் உரிமைக்காகப் போராட முடியும்.  

ஆனால் அவர்களால் முடியாது. ஏனென்றால் ஊழல் மூட்டைகளை எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சுமந்து செல்வதால் நித்தமும் பயத்தில் இருக்கிறார்கள். திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக் காலத்திலும் அஞ்சியது இல்லை. அந்தத் துணிச்சலில், தைரியத்தில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத எடப்பாடி கூட்டத்திடம் இன்றைக்கு தமிழக ஆட்சி சிக்கி இருக்கிறது.  தமிழகக் கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றுகிறோமோ அவ்வளவு இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்க முடியும். புதிய கல்விக் கொள்கையால்  கல்வி உரிமை பறிபோய்விட்டது. நீட் தேர்வால் மருத்துவக்  கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமை சீக்கிரம் பறிபோகப் போகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் வெளிமாநிலத்தவரைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றன. தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு உரிமையை எந்த வகையிலாவது தடுத்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக் கூடங்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறார்கள். இவை அனைத்தையும் தடுத்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவின் தோள்களில் தான் சுமத்தப்பட்டு இருக்கிறது.

இந்த உரிமைகளை போராடியும் வாதாடியும் பெற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் - எங்கும் எதிலும் தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களைக் காக்கும் பெரும் போர். தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர். அந்தப் போரில் வெல்வோம்! இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: