வேளாண் சட்டங்களை கண்டித்து தடையை மீறி பேரணி சென்ற கே.எஸ்.அழகிரி கைது: தேனியில் சாலை மறியலால் பரபரப்பு

தேனி: வேளாண்மை சட்டங்களை எதிர்த்து தேனியில் தடையை மீறி டிராக்டர் பேரணிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனியில் போலீசாரின் தடையை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணி 19ம் தேதி (நேற்று) நடைபெறும் என மாவட்ட காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 450 போலீசார் நேற்று தேனியில் குவிக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே டிராக்டர்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தங்கியிருந்த பழனிசெட்டிபட்டி  தனியார் ஓட்டலில் அவருடன் மாநில செயல் தலைவர் மயூரா ெஜயக்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்  அசன் ஆரூண், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெமி மேத்தா, தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதில், ஓட்டலில் இருந்து பேரணியாக தேனி நேரு சிலைக்கு சென்று மாலையணிவித்து கலைவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஓட்டலில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் புறப்பட்டனர். அப்போது பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசின் நடவடிக்கையை கண்டித்து தேனி - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது. முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், “உ.பி.யில் ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடந்துள்ளது. மோடியே அதனை எதிர்க்கவில்லை. ஆனால் தேனியில் நடக்க இருந்த பேரணிக்கு தடை விதிப்பது என்ன நியாயம்? மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டத்தை அனுமதித்தால் ஒப்பந்த சாகுபடி முறையால் கரும்பு விவசாயம் அழிந்ததுபோல பிற விவசாயமும் அழிந்துவிடும். பொதுத்துறை நிறுவனங்களைபோல வேளாண்மையும் அழிந்துவிடும். இப்புதிய வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெறும் வரை காங்கிரஸ் போராடும்’’ என்றார்.

Related Stories:

>