திருப்போரூர் அருகேவீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை பிடித்த பொதுமக்கள்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம், பாரதி நகர், பழண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (48). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி பெரும்புதூர் அருகே தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை வீட்டைப் பூட்டி விட்டு ஏழுமலை பெரும்புதூரில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு தனது மாமியார் வீட்டில் தங்கி விட்டார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திருப்போரூர் பாரதி நகரில் உள்ள ஏழுமலையின் வீட்டில் மர்ம நபர்கள் நடமாடுவது அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து செல்போன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் திரண்டு அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது வீட்டின் பிரதான கதவை உடைத்து உள்ளே சென்றிருந்த மர்ம நபர்கள் ஏழுமலையின் பீரோவை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் சுற்றி வளைத்தது தெரிய வந்ததும் கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சித்தனர். பொதுமக்கள் கொள்ளையர்களின் ஒருவனை மட்டும் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து கைகளை கட்டி திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருப்போரூர் போலீசார் வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (45) என்பதும் அவன் மீது அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, மேல்மருவத்தூர், கோயம்பேடு, சேலையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதும், கொள்ளைச் சம்பவம் ஒன்றில் திண்டிவனம் சிறையில் 2 ஆண்டுகள் இருந்து விட்டு அண்மையில் வெளியே வந்ததும் தெரிய வந்தது. பிடிபட்ட கொள்ளையனிடம் திருப்போரூர் போலீசார் அவன் எங்கெங்கு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: