குடும்ப தகராறை விலக்க வந்த உறவினர் மீது துப்பாக்கி சூடு: துப்பாக்கி, 8 குண்டுகள் பறிமுதல்

சென்னை: குடும்ப தகராறை விலக்க வந்த உறவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா (57). மண்ணடி அங்கமுத்து தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரகத்நிஷா (47). நேற்று முன்தினம் மாலை தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இப்ராகிம்ஷா அதே பகுதியில் வசித்து வரும் தனது மனைவியின் அக்கா மகன் அசாருதீன் (27) என்பவருக்கு போன் செய்து, நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

அப்போது, பரகத்நிஷாவுக்கு ஆதரவாக அசாருதீன் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்கு நேரில் வந்து பேசுவதாக கூறிவிட்டு அசாருதீன் போனை வைத்துள்ளார். அதன்படி, இரவு 10.30 மணிக்கு இப்கிராம்ஷா வீட்டுக்கு அசாருதீன் சென்றுள்ளார். அங்கு, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இப்ராகிம்ஷா, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, மரியாதையாக வீட்டை விட்டு வெளியே செல். இல்லையெனில்  சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனால், அசாருதீன் இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால், அவரை நோக்கி இப்ராகிம்ஷா துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அசாருதீனின் இடது கையில் குண்டு பாய்ந்தது. வலிதாங்க முடியாமல் அவர் ரத்தம் சொட்டிய நிலையில் அலறியபடி 4வது மாடியில் இருந்து கீழே ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மோதலில் காயமடைந்த இப்கிராம்ஷாவை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், இப்ராகிம்ஷா மனைவியிடம் விசாரித்தபோது, குண்டு வெடிக்கும் சத்தம் மட்டும் கேட்டது. வேறு எதுவும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இப்ராகிம்ஷா வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கி, 8 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இப்ராகிம்ஷாவிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: