×

பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சேதம்: கிருஷ்ணா நதிநீர் வருவதில் சிக்கல்

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரையும் அங்கிருந்து லிங்க் கால்வாயும் ஆங்காங்கே சரிந்து மண் மேடாக உள்ளதால் அங்கு திறக்கப்படும் தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு கங்கைத் திட்டம் என்பது தமிழகத்திலுள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்ட நதிநீர் வழங்கல் திட்டம் ஆகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் பெறப்படுவதால், இத்திட்டம் கிருஷ்ணா நதிநீர் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சைலம் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், பென்னார் பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா அணை மற்றும் கண்டலேறு அணை வழியாக, சென்னை நோக்கி திருப்பிவிடப்பட்டு, 406 கி.மீட்டர் தொலைவுக்கும் மேல் ஒன்றோடொன்று இணைந்த கால்வாய்கள் மூலம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயிண்ட் வந்தடைந்து, அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைகிறது.

பூண்டி ஏரியிலிருந்து, இணைப்புக் கால்வாய்கள் மூலம் மற்ற ஏரிகளான புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகியவற்றுக்குத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதியில் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் தலா 3.9 டிஎம்சி வீதம் 15.6 டிஎம்சி தண்ணீர் எடுத்து சைலம் அணையில் தேக்குகிறது. பின்னர், அங்கிருந்து சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான செலவு முழுவதும், பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது ஒப்பந்தம்.

கிருஷ்ணா நீர் கால்வாயில் இரு மாநிலங்களுக்கான பொது கால்வாய் பகுதிகளில் (மொத்தம் 14 இடங்கள்) பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக 4 ஆயிரம் கோடி செலவிட்டிருப்பதாக ஆந்திரம் கூறுகிறது. இரு மாநிலங்களுக்கும் பொதுவான கால்வாய் பகுதிகளில், கள ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்தும் அவ்வப்போது செலவுத் தொகையை தமிழக அரசு கொடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கிய 1983ம் ஆண்டு முதல், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் வரை 662 கோடியை ஆந்திராவுக்கு தமிழ்நாடு வழங்கியுள்ளது. கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடைபெறுவதாக  கூறப்படுகிறது. ஜூன் 1 முதல் மே 31 வரையிலான தண்ணீர் ஆண்டைக் கணக்கிட்டு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதால், இரண்டு போகம் சாகுபடி செய்யும் ஆந்திர விவசாயிகள், 3வது போகம் சாகுபடி செய்யவும் முயற்சிக்கிறார்கள்.

இதனால், சென்னைக்கு தேவையான அளவு கிருஷ்ணா நீர் வந்து சேராமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சென்னைக்கான கிருஷ்ணா நீரின் பங்கு சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தாலும், அந்த நீரை ஒழுங்குபடுத்தி நமக்கு அனுப்புவது கண்டலேறு அணைதான். அங்குள்ள, 5 மதகுகள் மூலம்தான் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இம்மதகுகள் வழியாகதான் சென்னைக்கான 12 டிஎம்சி, நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பாசனத்துக்கான நீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறுவில் 8.4 டிஎம்சியை விட அதிகமான நீர் இருக்கும்போது வினாடிக்கு 1000 முதல் 1600 கன அடி சென்னையின் குடி நீருக்காகவும், 100 அல்லது 200 கன அடி அளவுக்கு பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆனால், கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வரை உள்ள 152 கி.மீட்டர் கால்வாயின் கரைகளில் பொருத்தப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் ஆங்காங்கே பெயர்ந்து சரிந்துள்ளது. இதனால், கால்வாய்கள் மேடாக காட்சியளிக்கின்றன. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது. இதேபோல் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. கற்கள், மணல்களும் கால்வாய்க்குள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் வருவது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  வசாயம் செய்கின்றனர். இதனால், கண்டலேறு அணியில் திறக்கப்படும் தண்ணீரில், மூன்றில் ஒரு பங்கு கூட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரவில்லை.

திமுக ஆட்சியில் கிருஷ்ணா நதிநீர் திட்டம்
எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் உருவாக்கிய தெலுங்கு கங்கை திட்டப்பணிகள், சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது முடுக்கிவிடப்பட்டு, சென்னைக்கு முதன் முதலில் கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டது. கண்டலேறு முதல் பூண்டி வரையுள்ள கால்வாய்கள் பலப்படுத்தப்பட்டு, நீர் தங்கு தடையின்றி சென்னைக்கு வருவது உறுதி செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். முதலில் தெலுங்கு கங்கை கால்வாய் திட்ட ஒப்பந்தத்தின்படி 1996ம் ஆண்டு சென்னைக்கு தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து தமிழக எல்லை பகுதி வரை கால்வாய் மோசமாக இருந்ததே இதற்கு காரணம். கால்வாயின் இருபுறமும் பலம் இல்லாமல் உடைந்து இருந்ததால் கிருஷ்ணா நீர் வழியில் வீணானது.

இதனால் தண்ணீர் வரவில்லை. குடிநீர் கிடைக்காமல் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த புட்டபர்த்தி சாய் பாபா, 2002ம் ஆண்டு கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார். கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004ம் ஆண்டு நிறைவு பெற்ற பின், கிருஷ்ணா நதிநீர் முதன் முறையாக பூண்டி ஏரி வந்தடைந்தது.  அதற்காக ₹200 கோடி நிதியளித்து சத்ய சாய் பாபா பேருதவி செய்தார். அவரை, 21.7.2007ல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கவரவித்து விழா நடத்தினார்.

லிங்க் கால்வாயும் மோசம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம், மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கென புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. அதற்காக சிறுகடல், பாக்கம், மோரை, வெள்ளானுார், திருமுல்லைவாயல் வழியாக, 21.05 கி.மீட்டர் தூரத்திற்கு, கால்வாய் உள்ளது. இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லவும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையான பராமரிப்பின்றி உள்ளது. ஆவடி அடுத்த மோரை, மிட்ணமல்லி, பாக்கம் ஆகிய பகுதிகளில், தடுப்பு சுவர், கரை மற்றும் கிராம இணைப்பு சாலைகளின் தரைமட்ட பாலங்கள், கடுமையாக சேதமடைந்து உள்ளன.பல இடங்களில், சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கால்வாயை முழுமையாக மறைத்துள்ளன. மேலும் சில இடங்களில் மண் திட்டு உருவாகி உள்ளது. இந்த லிங்க் கால்வாயை சீரமைத்தால்தான் ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கும்.

Tags : Chennai ,Boondi Reservoir ,Krishna River , Damage to canal carrying water from Boondi Reservoir to Chennai: Problem in Krishna River water supply
× RELATED பெரியாறு கால்வாய் தண்ணீர் முழுமையாக...