×

கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்கும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச்  சிதைத்து அழிக்கும் நீட் தேர்வை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசியத் தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. மாணவ-மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பாஜ அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை.

சில மாநிலங்களில் நீட் தேர்வை எழுதியவர்களை விடவும், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான சர்ச்சை நெடுகிலும் வலுத்ததை அடுத்து, தேசியத் தேர்வு முகமை, முதலில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகத் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது ஓஎம்ஆர் தாளை வைத்து ஆய்வு செய்ததில், மதிப்பெண்கள் குறைந்ததாக ஏராளமான மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? என்ன காரணம்? யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டாமா ?

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 23468 பேர் தேர்வே எழுதவில்லை. தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வை விட 2,570 பேர் குறைவாகவே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆகவே நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு-குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தேர்வு என்பது இந்த ஆண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
அகில இந்திய அளவில் நீட் தேர்வினை 79 சதவீதம் பேர் ஆங்கில மொழியிலேயே எழுதியிருக்கிறார்கள். மத்திய அரசு வம்படியாகத் திணித்து வரும் இந்தி மொழியில் 12.80 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியிருக்கிறார்கள். அந்த அளவுக்கே இந்திக்கு விருப்பமும், வரவேற்பும்!

ஆகவே, போட்டித் தேர்வுகளில் இந்தித் திணிப்பை மத்திய பாஜ அரசு கைவிட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமோ, அடிப்படையோ தேவையில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதைத் தாங்க முடியாமல், நேற்றைய தினம் நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனே கண்கலங்கியிருக்கிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வாகும். ஆகவே, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் நீட் தேர்வை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,MK Stalin , MK Stalin urges govt to withdraw NEET exam destroys medical dream of rural, urban poor students
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...