×

செங்கல்பட்டு நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் அமைத்து ஓரிரு வாரங்கள் மட்டுமே செயல்பட்ட எரிவாயு தகனமேடை: மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  நகராட்சியின் 33 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், யாரேனும் உயிரிழந்தால், அவர்களது உடல்களை செங்கல்பட்டு பைபாஸ் சாலை அருகே உள்ள பழவேலி பாலாறு சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும் சிலர், இறந்தவர்களுக்கு சமாதி அமைத்தனர். இதனால், அங்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு நகராட்சி சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ரூ.25 லட்சத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. இங்கு, குறைந்த செலவில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. ஆனால், தொடங்கிய சில வாரங்களில், எரிவாயு தகனமேடை செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதையொட்டி, அதிக செலவு செய்து உடல்களை புதைத்து வருகின்றனர்.

தற்போது, கொரோனா தோற்றால் இறப்பவர்களின் உடல்களை உரிய பாதுகாப்புடன் மின்சார தகன மேடை மூலம் எரியூட்ட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், கொரோனாவால் உயிரிழப்பவர்  உடல்கள்,  ஆம்புலன்சில் எடுத்து சென்று, மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கலிவந்தப்பட்டு மற்றும் பேரமனூரில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாம்பரம் என பல பகுதிகளில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களும் இங்கேயே எரிக்கப்படுகிறது. இதனால், நேர விரயமும், பண விரயமும் ஆவதால் இறந்தவர்களின் உறவினர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இலவச ஆம்புலன்ஸ் வசதி எளிதில் கிடைப்பது இல்லை. இதனால், தனியார் ஆம்புலன்சில் இறந்தவர் உடலை பல கிலோமீட்டர் தூரம்  எடுத்து சென்று, ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து, மணிகணக்கில் காத்திருந்து, மறைமலைநகர் மின் மயானத்தில் தகனம்  செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் அங்கு, ஒரு நாளில், குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டுமே  சடலங்கள் தகனம் செய்கிறார்கள்.

மேலும், மாலை 5 மணி ஆகிவிட்டால், மறுநாள் எரியூட்டப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய படாதபாடு படவேண்டியுள்ளது. எனவே, செங்கல்பட்டில் உள்ள எரிவாயு தகன மேடையை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், குறைந்த செலவில் உடல்களை பாதுகாப்புடன் தகனம் செய்ய முடியும். இதில், மாவட்ட நிர்வாகம், தலையிட்டு செயல்படாத எரிவாயு மயானத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : municipality ,Chengalpattu , Gas incinerator set up in Chengalpattu municipality at a cost of Rs.
× RELATED மீஞ்சூர் பேரூராட்சிக்கு துணை மின்...