×

டு பிளெஸ்ஸி, ராயுடு, ஜடேஜா விளாசல் டெல்லி கேப்பிடல்சுக்கு 180 ரன் இலக்கு

ஷார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 180 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் சாவ்லாவுக்கு பதிலாக கேதார் ஜாதவ் இடம் பெற்றார். டிசி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. சாம் கரன், டு பிளெஸ்ஸி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சாம் ரன் ஏதும் எடுக்காமல் தேஷ்பாண்டே பந்துவீச்சில் நார்ட்ஜ் வசம் பிடிபட, சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதனால் டு பிளெஸ்ஸி - வாட்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. சென்னை அணி, முதல் 5 ஓவரில் 29 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அஷ்வின் வீசிய 10வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன் கிடைக்க, ஸ்கோர் வேகம் எடுத்தது.

2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்ந்த நிலையில், வாட்சன் 36 ரன் (28 பந்து, 6 பவுண்டரி) விளாசி நார்ட்ஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 39 பந்தில் அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 58 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் எம்.எஸ்.தோனி 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, சிஎஸ்கேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனினும், ராயுடு - ஜடேஜா ஜோடி கடைசி கட்டத்தில் சிக்சர்களாக விளாசித் தள்ள, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. இருவரும் 21 பந்தில் 50 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 45 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 33 ரன்னுடன் (13 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ் 2, ரபாடா, தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

Tags : Du Plessis ,Rayudu ,Jadeja Vlasal ,Delhi Capitals , Du Plessis, Rayudu, Jadeja Vlasal set a 180-run target for Delhi Capitals
× RELATED வாட்சன் 42, ராயுடு 41 ரன் விளாசல் சன்ரைசர்சுக்கு 168 ரன் இலக்கு