×

மனமே உறுதி கொள்

நன்றி குங்குமம் தோழி

வளர்ந்த நாடுகளில் தன்னை மேன்மை படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் தங்களுடைய ஆளுமைத் திறன், மனம், செயல் போன்றவற்றை  ஒரே நேர் கோட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்கான  பயிற்சி எடுத்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுப்பது என்.எல்.பி  (neuro linguistic programming) என்று அழைக்கப்படும் பயிற்சி முறையாகும். இது  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கட்டாயத்  தேவையாக இருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மிகக்குறைந்த அளவிலான பயிற்சி மையங்களே  இந்தியாவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரையில் என்,எல்.பி பயிற்சி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் ஷர்மிளா தேவியிடம்  என்.எல்.பி பற்றியும் அவருடைய பணிகள் குறித்தும் பேசினேன்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிவகாசிதான். கல்லூரி படிக்கும் போதே என்.எல்.பி குறித்த தேடல் இருந்தது. என்.எல்.பி என்பது  மேலை நாடுகளில் பரவலாக அமைந்திருக்கும் பயிற்சிமையங்கள். இந்த பயிற்சி மையங்களில் ஒவ்வொரு தனி மனித ஆளுமைத் திறன்,  குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை எப்படி சரி செய்வது? மனம்,செயல், சிந்தனையை எப்படி ஒன்றிணைத்து வாழ்க்கையில் வெற்றி  பெறுவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த பயிற்சி பலரின் வாழ்க்கையை வெற்றிப் பாதையை நோக்கிஅழைத்துச்  சென்றிருக்கிறது. பலரின் வெற்றியை தக்க வைத்திருக்கிறது.  கல்லூரி படிப்பு முடிந்ததும் களிமண் மற்றும் பேப்பர் மூலம் குழந்தைகளுக்கு  கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் வகுப்பை மதுரையில் நடத்தி வந்தேன்.  அங்கு நண்பர் ஒருவர் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  என்.எல்.பி வகுப்பு எடுத்துவந்தார்.

அவருடன் உதவியாளராக பணியாற்றினேன். சில மாதங்களுக்கு பிறகு கேரள மாநிலத்தினர் என்.எல்.பி வகுப்பு எடுப்பது தெரியவந்தது.  அங்குதான் பயிற்சியும் பெற்றேன்.  அந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்களே. யு.கே வில் இருந்து வருகிறவர்கள்  எங்களுக்கு பயிற்சி அளித்தனர்.  பயிற்சி முடித்த கையோடு மதுரையில் வகுப்பு எடுக்க தொடங்கி விட்டேன்.  7 கிளவர் என்கிற  என்.எல்.பி நிறுவனத்தை உருவாக்கினேன். இதில் பல பிரிவுகளை உருவாக்கினேன். தொழில் முனைவோர்கள் எப்படியான தலைமைப்  பண்பை பெற்றிருத்தல் வேண்டும் என்று ஆண்,பெண் இருவருக்கும் பயிற்சி அளிக்கிறேன். Queen bee  என்கிற பிரிவில் முனைவோர்கள்,  கல்லூரி மாணவிகள், குடும்பத்தலைவிகளுக்கு தங்களுக்கான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது, அவர்களின் ஆளுமைத் திறனை  எப்படி  வளர்ப்பது பற்றி சிறப்பு வகுப்பு நடத்துகிறேன்.

Re Born என்கிற பிரிவில்  மாணவிகளுக்கு 3லிருந்து 6 நாள் பயிற்சி அளிக்கிறேன். இதில் மாணவிகள்  தங்களை முழுமையாக  மாற்றிக்கொள்ளவும், ஆழ் மனதில் உள்ள தடைகளை எப்படி சரி செய்து, தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதலை கற்றுக்கொள்ள  இந்த வகுப்பு நடக்கிறது. கணவன்-மனைவி உறவுகளில் உள்ள சிக்கல்களை எப்படி இருவரும் எதிர்கொள்வது, இன்றைய இயந்திர உலகில்  தங்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்களை எப்படி அணுகுவது குறித்து happy couple என்கிற பிரிவில் பயிற்சி எடுத்து வருகிறேன்.  ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்நாளில் தானே சுயமாக முடிவெடுக்கும் பக்குவம் கிடைப்பது டீன் ஏஜ் பருவம்தான். அப்படி டீன்  ஏஜ் பருவத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை எப்படி வளர்ப்பது, டீன் ஏஜ் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும்

பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று அவர்களுக்கான வகுப்பும் உருவாக்கி மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.   திருமணமாகி சில காலங்களுக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் அதிகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை பொருளாதாரமாக  இருக்கிறது. இதன் மூலம் தான் பெரும்பாலான குடும் பங்களில் பிரச்சனைகள் வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று உளவியல்  ரீதியாக நான் பயிற்சி அளிக்கிறேன். பொருளாதாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி பொருளாதார ஆலோசகர் வரதராஜன்  வகுப்பு எடுத்துவருகிறார்.  இது மட்டுமல்லாமல் யங் இந்தியன்ஸ் அமைப்போடு இணைந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  வன்முறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். குழந்தைகளை நேரடியாகவே சந்தித்து குட் டச்... பேட் டச் குறித்து எங்கள்  குழு பயிற்சி அளித்து வருகிறது. பொது மக்களிடம் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

பல்வேறு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் உதவியோடு கல்லூரி, கிராமங்கள் என்று நேரடியாக மக்களை சந்தித்து உறுப்பு தானம்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.  தற்போது மதுரையில் மட்டுமல்லாமல் 3 மாதத்திற்கு ஒரு முறை சென்னையிலும்  என்.எல்.பி. வகுப்பு எடுத்து வருகிறேன். மேலை நாடுகளில் என்.எல்.பி. குறித்த விழிப்புணர்வு நிறைய இருக்கிறது. இந்தியா போன்ற  வளரும் நாடுகளில் குறிப்பாக தமிழகத்தில் என்.எல்.பி குறித்த விழிப்புணர்வு மிகக்குறைவு. இதனால் மேல் தட்டு மக்கள் மட்டுமே  பயன்பெற்று வருகின்றனர். விரைவில் அனைத்து மக்களுக்குமான ஒன்றாக என்.எல்.பி பயிற்சி வகுப்பு மாறும்... அதற்கான முயற்சியை  எடுத்து வருகிறோம்’’ என்கிறார் ஷர்மிளாதேவி.      

-ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!