×

அற்றார் அழிபசி தீர்த்தல்

நன்றி குங்குமம் தோழி

சைக்கிள் வாங்குவதற்காக நான்கு ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்துவைத்த 8200 ரூபாயை மழை வெள்ளத்தில் தவிக்கும் கேரளாவிற்கு  நிதியுதவியாக அளித்து அனைவரையும் நெகிழவைத்துள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அனுப்பிரியா.தமிழ்நாட்டில் இருந்தும் இளைஞர் கள், பல்வேறு அமைப்புகள் நிவார ணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த  தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்து தானும் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று தனது தந்தையின் உதவியுடன் கேரள அரசு  அறிவித்திருந்த வங்கிக் கணக்கில் தன்னு டைய பணம் 8200 ரூபாயை அளித்துள்ளார் அனுப்பிரியா. அவருக்கு அனைத்து தரப்பில்  இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த செய்தி ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பங்கஜ்  முன்ஜலுக்கும் போய் சேர்ந்தது.அனுப்பிரியாவின் மனித நேயத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பங்கஜ்  முன்ஜல் ஹீரோ சைக்கிள் ஒன்றை வழங்குவதாக வும். ஒவ்வோர் ஆண்டும் உங்களுக்கு சைக்கிள் வழங்க ஹீரோ நிறுவனம்  விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே விழுப்புரம்  ஹீரோ நிறுவனத்தில் அனுப்பிரியாவுக்கு சைக்கிள்  வழங்கப்பட்டது. இதுபற்றி அனுப்பிரியாவிடம் பேசினேன்.

“நான் எல்.கே.ஜி. படிக்கும் போதிலிருந்து சைக்கிள் வாங்க வேண்டும் என்று தினமும் கிடைக்கும் சில்லறைகளை உண்டியலில் சேமித்து  வந்தேன். தினமும் அப்பாவுடன் மாலை நேரத்தில் தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பேன். அப்படி முன்பு செய்தி பார்க்கும் போது  கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிறைய பேர் கஷ்டப்படுவதை பார்த்தேன். என்னை விட சின்ன குழந்தைகள் பால் கூட  இல்லாமல் அழுது கொண்டிருந்ததை செய்தியில் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு நான் சேர்த்து வைத்த பணம்  கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று அப்பாவிடம் சொன்னேன்.

மறுநாள் நான் சேர்த்து வைத்த எல்லா சில்லறைகளையும் எடுத்து எண்ணினோம். நான் மொத்தம் 5 உண்டியல்களில் சில்லறைகளை  சேர்த்து வைத்தேன். மொத்தம் 8200 ரூபாய் இருந்தது. அதை அப்படியே கேரளாவிற்கு அனுப்பி வைத்தோம்.ஹீரோ நிறுவனம் எனக்கு  சைக்கிள் வழங்கியது  மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரும் கேரளாவில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும்” என்று தன் மழலை  மொழியில் முடித்தார் அனுப்பிரியா. அக்குழந்தைக்கு இருக்கும் மனிதநேயம் அனைவரிடமும் இருந்தால் உலகம் அன்பால்  நிறைந்துவிடாதா?                   

-ஜெ.சதீஷ்

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்