அழகை குறைக்கும் பரு

நன்றி குங்குமம் தோழி

பயூட்டி பாகஸ்

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

பருவ வயதை எட்டிப் பிடிக்கும் இருபாலரையும் அலறச் செய்யும் மிகப் பெரும் பிரச்சனை பரு. பரு முகத்தில் வந்துவிட்டால்  அவ்வளவுதான், அவர்களின் மனம் எதிலும் ஒட்டாது. சதா அந்தப் பருவைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  பற்றாக்குறைக்கு, தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களும் அவர்கள் பங்குக்கு விற்பனை யுக்தியை இளைஞர்களை குறிவைத்தே  பலவிதமான காஸ்மெட்டிக் அயிட்டங்களை இளைஞர்களின் தலையில் கட்டும் முயற்சியில் இருப்பார்கள்.

விளைவு, யார் எதைச்  சொன்னாலும் அதைச் செய்து பார்த்துவிடும் முயற்சியில் இளைஞர்கள் மனோநிலை தூண்டப்படுகிறது. பரு வந்த இடத்தையே  என்னேரமும் விரல்களால் தொட்டுப் பார்ப்பது, அழுத்துவது, தோல் மருத்துவர்களின் முறையான அறிவுரையின்றி முகப்பூச்சு க்ரீம்களை  மாற்றி மாற்றி பயன்படுத்துவது, அழகுசாதனப் பொருட்களில் உள்ள ஒவ்வாமையால் தோன்றும் தோல் அலர்ஜி போன்றவற்றால் ஏற்படும்  குழி, தழும்பு, பள்ளம், மேடு  போன்றவை அவர்களின் முகத்தில் ஒரு நிரந்தர தடத்தை ஏற்படுத்திவிடும்.

கன்னத்தில் பரு வந்து மறைந்த இடத்தில் குழி ஏன் வருகிறது? யார் யாருக்கெல்லாம் வருகிறது? அவற்றை வீட்டில் உள்ள பொருட்களைக்  கொண்டு எவ்வாறு நீக்குவது. பார்லர்களை அணுகி முறையாக பயின்ற அழகுக் கலை நிபுணர்கள் மூலம் நீக்குவதற்கான செயல்முறைகள்  என்ன என்பவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.பரு வந்து நீங்கிய இடத்தில் தோன்றும் குழி என்பது எல்லோர் முகத்திலும் ஒரே  அளவில் இருப்பதில்லை. சிலருக்கு குழியின் அளவு சிறியதாகவும், சிலருக்கு பெரியதாகவும் காணப்படும். எல்லோர் உடலில் உள்ள  தோல்களிலும், நம் கண்களுக்குப் புலப்படாத சிறுசிறு துளைகள் தலை முதல் கால் வரை பரவிக் காணப்படும்.

நம்  உடலின் சுவாசம் என்பது மூக்கு மற்றும் வாய் வழியாக மட்டுமே நிகழ்கிறது என்பது பெரும்பாலானோரின் எண்ணம். இத் தொடரின்  முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல, உடல் உள்ளுறுப்புகள் நமது தோலில் இடம்பெற்றுள்ள சிறுசிறு துளைகள் வழியாகத்தான்  பெரும்பாலும் சுவாசிக்கின்றன. அதனால்தான் உடலுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் உடனே முகம் காட்டுகிறது. தோலில் உள்ள சிறு  துளைகள் வழியாகத்தான் வியர்வை, உடலில் உள்ள எண்ணைத் தன்மை எல்லாம் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றும் முறையில்  சிக்கல் வரும்போது தோலில் குழிகள் அதாவது பள்ளம் ஏற்பட்டு, தோலின் தோற்றத்தை விகாரப்படுத்தும்.

தோலில் துளைகள் பெரிதாக மிக முக்கியமான காரணங்கள்

1.    எண்ணைத் தன்மை குறைவாக உள்ளவர்களுக்கு அவர்களின் தோலில் இயல்பாக உள்ள சிறு துளைகள் வழியாகவே எண்ணைப்  பசை வெளியேறிவிடும். எண்ணைப் பசை அதிகமாக சுரப்பவர்களுக்கு, சிறு துளைகள் வழியாக வெளியேற முடியாத நிலையில் துளைகள்  கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே பெரிதாகத் துவங்கும்.

2.    அதிகமாக வியர்க்கும் தன்மை உள்ள தோல் அமைப்பைப் பெற்றவர்களுக்கு, தோலில் டெட் செல்ஸ் அதிகமாக இருக்கும்.  தொடர்ந்து வியர்வை வெளியேறும்போது அடைக்கப்பட்ட துளைகள் தானாகவே பெரிதாகத் துவங்கும்.

3.    டீன் ஏஜ் பருவத்திலும், மாதவிடாய் நேரத்திலும், தாய்மைப்பேறு காலத்திலும் மகளிருக்கு தோன்றிய பருக்களால் ஏற்பட்ட சிறு  துளைகள் வயது முதிர்ச்சி அடையும்போது பெரிதாகத் தெரிய ஆரம்பிக்கும். பெண்களின் தோலில் உள்ள கொலாஜின் அளவு குறைபாடு  மற்றும் தோலில் உள்ள எலாஸ்டிசிட்டி தன்மை குறைவே காரணம்.

4.    ஆண்களின் தோல்களில் உள்ள துளைகள் பெண்களின் தோலில் இருப்பதைவிட சற்று பெரிதாகவே இருக்கும். இதன்  காரணமாகவே ரோமங்கள் அவர்களுக்கு அடர்த்தியாக இருக்கும். விளைவு, ஆண்களுக்கு பரு தோன்றினால் உண்டாகும் பள்ளங்கள் சற்று  பெரிதாகத் தெரியும்

5.    ஜெனட்டிக் காரணங்களும் முகத்தில் குழிகள், பள்ளங்கள் தோன்றக் காரணமாக இருக்கும்.

6.    வெளியில் உள்ள தூசி அழுக்கு போன்றவை முகத்தில் படியும்போது, தோலில் உள்ள துளைகள் அடைபட்டு, தோல் சுவாசிக்கும்  தன்மையை இழந்து, கழிவுகள் வெளியேற முடியாத நிலையில் பாதிப்படைகிறது

7.    சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்கள் தோலில் உள்ள கொலாஜினையும், எலாஸ்டிசிட்டித் தன்மையையும் குறைக்கவல்லது.  சூரியஒளி தோலில் தொடர்ந்து நேரடியாகப் படும்போது தோல் அடர்த்தியாகி துளைகள் பெரிதாகத் தெரியத் துவங்கும்.

8.    அதிகமாக மேக்கப் போடுவதன் மூலமாகவும் தோலின் சுவாசம் தடைபடும்.முகப்பரு வந்ததற்கான சுவடாக ஒரு சிலருக்கு,  பள்ளம், குழி போன்றவை வந்த இடத்தில் நிரந்தரமாக இருக்கும். இது ஒரு சாரரின் பிரச்சனை. இப்பிரச்சனையை எப்படி நாமாகவே  முயன்று, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.

*    வெளியில் செல்லும்போது முகத்தை மறைத்துக் கொண்டு செல்வதே மிகவும் நல்லது.

*    வீட்டிற்கு வந்ததும் முகத்தை சாதாரண நீரால் சுத்தம் செய்தல் வேண்டும்.

*    அதிகமாக அழகு சாதனப் பொருட்களை இவர்கள் பயன்படுத்துதல் கூடாது.

*    தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நீரால் சுத்தம் செய்துவிட்டு படுக்க வேண்டும்.

*    நிறைய தண்ணீர் குடித்தல் வேண்டும்.

*    பேசியல்  செய்வதாக  இருந்தால், தோலிற்கு எலாஸ்டிசிட்டி தன்மையினைத் தரும் பேசியலாகச் செய்தல் வேண்டும்.

முகத்திற்கு ஸ்டீம் செய்யும்போது தோலில் உள்ள துளைகள் இயல்பாக திறக்கும். ஸ்டீம் எடுத்து முடித்ததும், முகத்தை துடைத்துவிட்டு  அப்படியே விட்டுவிடுவதால் திறந்த நிலையில் உள்ள துளைகள் அப்படியே இருக்கும். அழுக்குகள் அதன் வழியே சுலபமாக நுழையும்.  எனவே எப்போதும் ஸ்டீம் செய்து முடித்த நிலையில், முகத்திற்கு டோனர் அல்லது ஆஸ்டிரிஜன்ட் இவற்றில் எதையாவது ஒன்றை தடவி  தோலின் துளைகளை மூடுதல் வேண்டும். பள்ளம், குழி போன்ற முக அமைப்பை பெற்றவர்கள் சாதாரணமாக முகத்தை கழுவும்போதே  டோனர் அல்லது ஆஸ்டிரிஜன்ட் முகத்திற்கு அப்ளை செய்தால் நல்லது. இது இரண்டும் வீட்டில் இல்லாதவர்கள் கடலை மாவு, முல்தானி  மட்டி, பயத்த மாவு இவற்றில் எதையாவது ஒன்றை பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டுக் கொள்ளலாம்.

நமது வீடுகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போடுவதன் மூலமாக முகத்தில் இருக்கும்  குழிகளின் அளவை சற்று கட்டுப்படுத்தலாம். ஆனால் அதை முழுவதுமாக மறைக்க முடியாது.ஒரு கப் அரிசி மாவு அத்துடன் ஒரிஜினல்  மஞ்சள் பொடி சிறிதளவு, தேன் ஒரு ஸ்பூன், லெமன் அரை ஸ்பூன் இவை எல்லாவற்றையும் கலந்து பேஸ்டாக்கி இரவில் 10 முதல்  பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். அரிசி மாவு இயல்பாகவே தோல்களை டைட் செய்யும் தன்மை  கொண்டது. தோல்கள் டைட் ஆகும்போது முகத்தில் உள்ள துளைகள் சின்னதாகத் தொடங்கும். இதனால்தான் பிறந்த குழந்தையை அரிசி  களைந்த நீரால் குளிக்க வைப்பார்கள். இதனால் தொளதொளவென்று இருக்கும்

குழந்தையின் தோல் இறுக்கமடைவதுடன், குழந்தையைத் தொடும்போது மென்மையாக இருக்கும். குழந்தை மட்டுமல்ல அரிசி களைந்த  தண்ணீரைச் சேகரித்து வைத்து, அந்த நீரால் முகத்தை சுத்தம் செய்தால் நமது தோலும் டைட்டாகவும் சாஃப்டாகவும் மாறத் துவங்கும்.வயது முதிர்ச்சி அடையும்போது இயல்பாக தோலில் உள்ள எலாஸ்டிசிட்டி தன்மை குறையத் துவங்கும். அப்போது தோலில் உள்ள  துளைகள் பெரிதாகத் தெரியத் துவங்கும். தோலிற்குத் தேவையான எலாஸ்டிசிட்டி தன்மை தயிரில் மிகவும் அதிகமாக உள்ளது.  எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் முகத்தில் தயிரை அப்ளை செய்யலாம். தயிர் குளிர்ச்சி தருவதுடன்,  முகத்தில் உள்ள ஸ்போசஸ்களை டைட் செய்யும் தன்மையினை தர வல்லது.

நாம் உணவாக உட்கொள்ளும் வாழைப்பழம் வழவழவென இருப் பது அனைவருக்கும் தெரியும். வாழைப் பழத்தில் தோலிற்குத் தேவையான  கொலாஜின் லெவல் அதிகமாக உள்ளது. வாழைப்பழத்தை நன்றாக பேஸ்டாக்கி, தேவைப்பட்டால் கொஞ்சம் பசும்பால் சேர்த்து முகத்திற்கு  மாஸ்க் போடலாம் அல்லது மசாஜ் எடுக்கலாம். இதனால் நமது தோலில் எலாஸ்டிசிட்டி தன்மை கூடும். தோலிற்கு பேபி சாஃப்ட் தன்மையும் கிடைக்கும். வெள்ளரிக்காய்,  கேரட், மாதுளை போன்றவைகளை நன்றாக மிக்ஸியில் அடித்து ஜூஸ் எடுத்து ஸ்ப்ரே பாட்டில்களில் தனித்தனியே ஊற்றி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் முகத்தில்  ஸ்ப்ரே செய்து, தோலினை அப்ஸர் செய்யவிட்டு, பிறகு முகத்தை சுத்தம் செய்தால் ஸ்கின் போசஸ் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக்  குறையும்.இரவில் தூங்கச் செல்லும் முன் நல்ல மாய்ச்சரைஸர் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்துவிட்டு படுத்தல் மிகவும் நல்லது.

அடுத்த இதழில்…

முகத்தில் தோன்றும் குழிகளையும், பள்ளம், மேடு போன்றவைகளை பார்லரில் பேசியல் மூலம் சரி செய்யும் முறை.

எழுத்து வடிவம்: மகேஸ்வரி

Related Stories: