ஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’

நன்றி குங்குமம் தோழி

தயாரிப்பில் கலக்கும் பெண்கள்

திருமணமோ… வரவேற்போ… இயல்பாக பெண்கள் ரசிப்பது மணப்பெண் அலங்காரத்தைதான். மணப்பெண் எந்த மாதிரியான உடை  உடுத்தியிருக்கிறார், அவரின் சிகை அலங்காரம் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது, மணப்பெண் அலங்காரத்திற்கு எந்த மாதிரியான  அணிகலன்களை பயன்படுத்தியிருக்கிறார் என பார்க்காத, அதைப் பற்றி பேசாத பெண்களே இருக்க மாட்டார்கள். அதுவும் சிகை  அலங்காரத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அலாதியானது. மணப்பெண் கூந்தலை எந்தமாதிரியான வடிவில், அவரது  முக அமைப்பிற்கு ஏற்ற விதத்தில் அழகுபடுத்துவது, அதில் எந்த மாதிரியான அலங்கார ஆபரணங்களைக் கொண்டு, பூக்களைக் கொண்டு  அழகுபடுத்துவது, திருமண உடைக்கு இந்த அலங்காரம் பொருந்துமா என மணமகள் கூந்தல் அலங்காரத்திற்கு பெண்கள் ரொம்பவே  மெனக்கெடுவார்கள்.

முன்பெல்லாம் திருமணம் என்றால் இயற்கையாக பூக்கும் மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர்களே மணமகளின் தலையை  அலங்கரிக்கும். இயற்கை மலர்களைக் கொண்டே மணமகள் ஜடை, வேணி போன்றவற்றை   தயாரித்து விற்பனைக்கு  வைத்திருப்பார்கள்.  ஆனால் இப்போது மணமகள் அலங்காரத்திற்கான அலங்காரம் நவீன பாணிக்கு நிறையவே மாறியுள்ளது. உடைக்கேற்ற வண்ணத்தில்,  செயற்கை மலர்களால் அலங்கரிக்கப்படும் சிகை அலங்காரங்களை பெண்கள் விரும்பத் துவங்கிவிட்டனர். சென்னை அம்பத்தூரில், மணப்  பெண்ணிற்கான  கூந்தல் அலங்காரப் பொருட்களை மட்டுமே தயார் செய்யும்  ‘சாந்தி ப்ரோச்சர்ஸ்’ என்கிற ஹேர் ப்ரோச்சர்ஸ்  நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் மேரி ஆன் சாந்தியை சந்தித்தபோது அவரது தயாரிப்பு, தொழில், வேலைவாய்ப்பு குறித்து  நம்மிடம் விரிவாகப் பேசினார்.

"சின்ன வயதில் இருந்தே வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது எனக்கு ரொம்பவே பிடித்த விசயம்.  ஒரு சின்ன  அறையை கிராஃப்ட் வேலைகளை செய்து அழகானதாக மாற்றிவிடும் கிரியேட்டிவிட்டி என்னிடம் நிறைய இருந்தது. அலமாரிகளில்  அடுக்கிவைக்கும் உடை களைக் கூட வேறுவிதமாக, பார்க்க கவரும்விதமாக அடுக்கிவைத்து அழகு பார்ப்பேன். அழகு படுத்துவது எனக்கு  இயல்பாக வந்தது. விழுந்து விழுந்து படித்து பரீட்சை எழுதுவதில் எனக்கு அத்தனை ஆர்வம் இல்லை. பத்தாம் வகுப்பு முடித்ததும்  டிப்ளமோ இன் செக்ரட்டரி கோர்ஸ் முடித்தேன். ப்யூட்டி பார்லர் தொடர்பான அத்தனை கோர்ஸ்களையும் முடித்தேன். அழகு கலை  விசயங்களை மட்டுமே ஆர்வத்தோடு கற்க ஆரம்பித்தேன் எனக்கு என்ன வருமோ அது தொடர்பான விசயங்களைத் தேடித்தேடி கற்றேன்.  ரியல் ஃப்ளவர்ஸ் பெடல்ஸ்களை தனித்தனியாகப் பிரித்து ரோல் பண்ணி அதை வேறுவிதமாக மாற்றி என எதையாவது செய்து  வித்தியாசப்படுத்திக் கொண்டே இருப்பேன்.  புதுசா எதையாவது பார்த்தால் அதை எப்படி செய்து இருப்பார்கள் என வாங்கி பிரித்துப்  பார்த்தே அதை கண்டுபிடித்துவிடுவேன்.

2007ல் சொந்தமாக ப்யூட்டி பார்லர் துவங்கினேன். அழகுபடுத்துவது ஒரு மிகச் சிறந்த கலை. எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் நிறைய  புதுப் புது விஷயங்களை கற்றுக்கொண்டு அதை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மணமகள் அலங்காரம் என்றால்  சின்னச்சின்ன நுணுக்கங்களை எல்லாம் செய்து திருமண வீட்டாரை அசத்திவிடுவேன். வாடிக்கையாளர்களுக்கு என் வேலை பிடிக்கத்  தொடங்கியது. துவக்கத்தில் நிறைய முயற்சி செய்து என் கற்பனைக்கு ஏற்ப மணப்பெண் தலை அலங்காரத்திற்கான ஃப்ளவர்ஸ் க்ளிப்களை  நானே ரசனைக்கேற்ப விதவிதமாய் தயாரித்து அதை வைத்தே அலங்கரிக்கத் துவங்கினேன். என் தயாரிப்புகள் அனைவரையும் கவர்ந்தது.  எனது தயாரிப்புகளை எனது பார்லர் நண்பர்களும் வாங்கிச் சென்றனர்.

எனது டிசைன்கள் பிடித்துப்போய் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்கள் வரத் துவங்கின. சில டிசைன்கள் மிகவும் பிடித்துப்போய் 5 டஜன்  வேண்டும் என உடனடியாக ஆர்டர்கள் வரத் துவங்கியது. நான் மட்டுமே தனியாக பெரிய ஆர்டர்களை எப்படி தயார் செய்வது என  யோசிக்கத் துவங்கினேன். என்னிடம் ப்யூட்டிஷியன் பயிற்சிக்கு வரும் டிரெயினர்கள்மற்றும் என் வாடிக்கையாளர்களிடம் பேசி "இதற்கான  ஆர்டர் நிறைய வருகிறது. அதற்கான பயிற்சி தருகிறேன். இணைந்து செய்யலாமா" எனக் கேட்டேன். எல்லோரும் ஆர்வத்தோடு  வந்தார்கள். இப்படித்தான் எனது ஹேர் ப்ரோச்சர்ஸ் தொழில் நான்கு முதல் ஐந்து பேரைக் கொண்டு எனது ப்யூட்டி பார்லரிலேயே  ஆரம்பமானது.

சென்னை பாரிமுனையில்  உள்ள  மொத்த அங்காடிகளுக்குச் சென்று தேவைப்படும் விதவிதமான மூலப்பொருட்களை சேகரித்து வாங்கி  வந்து என் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான ஹேர் ப்ரோச்சர்களை தயார் செய்யத் துவங்கினேன். அத்தனையும் மணப்பெண் சிகை  அலங்காரத்திற்கான ப்ரோச்சர்களாக, கண்ணைக் கவரும் வண்ணத்தில், பலவித டிசைன்களில் இருக்கும். வேணி, மொட்டு, டபுள் வேணி,  லேயர் ரோஸ், பட்டு ஜடை, மொட்டு ஜடை, ரோல் ரிங், பீட்ஸ் வேணி என 28 விதமான வெரைட்டியான அயிட்டங்கள் எங்களிடம்  தயாராக உள்ளன. கலர் ரிப்பன், கோல்டன் ரிப்பன், வொயிட் பீட்ஸ், கோல்டன் பீட்ஸ் ஆகியவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தி  தயாரிக்கிறோம். சிலர் அவர்களுக்கு தேவையான கலர் டிசைனை சற்று மாற்றிக் கேட்டால் அதையும் செய்து தருகிறோம். எதையுமே அடுத்தவர்களின் மாடலை பார்த்து நான் செய்வதில்லை.மூலப்பொருட்கள் இருக்கும் அறைக்குச் செல்வேன். கொஞ்ச நேரம்  யோசிப்பேன்.

இதை எப்படி மாற்றி எந்த மாதிரியான டிசைன்களை செய்யலாம் என கற்பனைக் குதிரையை சற்று தட்டி விடுவேன். ஒரு சில  நிமிடங்களிலே என் மனதில் ஏதாவது டிசைன் வந்து நிற்கும். அது என் இயல்பிலேயே இருக்கிறது. நானாக மாற்றி மாற்றி யோசித்து  ஒன்றை உருவாக்குவேன். நான் உருவாக்குவது எனக்கும் பிடித்து அது மற்றவர்களுக்கும் பிடித்திருந்தால், அதை தயாரிக்க ஆகும் நேரம்,  அதற்கான செலவு, ஒரு மணி நேரத்தில் எத்தனை செய்ய முடியும் என்பதை எல்லாம் கணக்கிட்டு அதற்கான பயிற்சி கொடுத்து  தயாரிக்கும் பணியில் மற்ற பெண்களையும் ஈடுபடுத்துவேன்.

ஆர்டர்கள் நிறைய வரத் துவங்கின. ஆட்கள் போதவில்லை. என்னிடம் வரும் க்ளையன்ட்களையும் அவர்கள் மூலமாக அவர்களுக்கு  தெரிந்தவர்கள் என் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலிருந்து சம்பாதிக்க நினைக்கும் பெண்களாக  சேர்க்கத் துவங்கினேன். இப்போது என்னிடம் 110 பெண்கள்வரை வேலை செய்கிறார்கள். இங்கு வந்து வேலை செய்ய முடியாத பெண்கள்  தேவையான மூலப்பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று செய்து எடுத்து வருகிறார்கள்.

சில வயதான பெண்கள் கூட வீட்டில் இருந்து  செய்கிறார்கள். கல்லூரிக்குச் செல்லும் பெண்களும் இதில் பாக்கெட் மணிக்காக பகுதிநேர வேலையாக ஈடுபடுகிறார்கள். ஒரு ஸ்டோன்  ஒட்டினால் 1 ரூபாய் என்ற கணக்கில் சிலர் ஸ்டோன் ஒட்டும் வேலை மட்டுமே செய்வார்கள். அவர்களுக்கு எதில் விருப்பமோ அதில்  ஈடுபடுவார்கள். பீட்ஸ் கோர்ப்பது. பட்ஸ் செய்வது. சிறிய மற்றும் பெரிய பட்ஸ் செய்வது என இதில் நுணுக்கமான வேலைகள் நிறைய  உள்ளன. சிலர் பட்ஸ் மட்டுமே தயாரிப்பார்கள். ஒரு சிலர் தயாரித்த பட்ஸ்களை கோர்க்கும் வேலையில் ஆர்வம் காட்டுவார்கள். பட்ஸ்  செய்வது சிலருக்கு அழகாக வரும்.

சிலருக்கு அது வராது என்றால் அவர்கள் ஒட்டுவது, மணி கோர்ப்பது மாதிரியான சுலபமான வேலைகளை செய்ய வைப்போம். இரண்டு  நாட்கள் கொடுக்கும் பயிற்சியிலே நான் அவருக்கு படைப்பாற்றல் இருக்கிறதா, அவரால் இதை செய்ய முடியுமா எனக்  கண்டுபிடித்து விடுவேன்.  அவருக்கு  சுலபமாக என்ன வருகிறதோ அந்த வேலையை மட்டும் கொடுப்போம். ஃபினிஷிங்கும் பார்ப்போம்.  அதிக வேஸ்டேஜ் இல்லாமல் செய்ய வைப்பேன். ஃபினிஷிங் சரியில்லை என்றால் அதை ஒதுக்கிவிடுவேன். நான் எதிர்பார்க்கும்  ஃபினிஷிங் கொண்டுவர வைப்பதே முக்கியம். ஒரு நாளைக்கு 300 ரூபாயில் இருந்து அவர்கள் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து  சம்பாதிக்கலாம். ஒரு சிலர் ஆர்வத்தோடு ஒரு பண்டில்கூட செய்து விடுவார்கள்.

சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த விற்பனை அங்காடிகள், ப்யூட்டி பார்லர்கள் என எங்கள் தயாரிப்புகளை எல்லா இடங்களிலும்  சப்ளை செயகிறோம். இதற்கென விற்பனைப் பிரதிநிதிகளாக எங்களிடம் வரும் பெண்களே ஈடுபடுகிறார்கள். அதற்கென சாம்பிள் பேக்  தயார் செய்து ஆல்பம், கலர் பேலட், ரேட் லிஸ்ட் எல்லாம் அதில் போட்டு கொடுத்து விடுவோம். அதை வைத்து அவர்கள் ஆர்டர் பெற்று  வருகிறார்கள். படித்த பெண்கள் சிலரும், பார்லர்களை நடத்தும் ப்யூட்டீஷியன்களும் எங்களுடன் தயாரிப்பு மற்றும் மார்கெட்டிங் பணிகளில்  ஈடுபடுகிறார்கள்.

கிறிஸ்டியன் திருமணம் என்றால் ஹேர் ப்ரோச்சர்ஸ் மட்டுமல்ல மணமகளின் துணையாக வரும் கிறிஸ்டியன் ப்ரைட்ஸ் பெண்களுக்கு,  மணமகள் கையில் வைத்திருக்கும் கூடை வடிவிலான பொக்கே என எல்லாவற்றுக்கும் எங்களிடம் ஆர்டர் வருகிறது. சாதாரண மூங்கில்  கூடைகளில் விதவிதமான ஃப்ளவர் பெடல்ஸ் இணைத்து பார்க்க அழகாக கொடுத்துவிடுவோம். திருமணத்திற்கு பயன்படுத்துவதற்கு  மட்டும் என்றில்லை, வேலைக்குச் செல்லும் பெண்கள் காட்டன் சேலைகளை உடுத்தும் போது இந்த ஹேர் ப்ரோச்சர்களை உடைக்கு ஏற்ற வண்ணத்தில் முடியில் இணைக் கும்போது பார்க்கவே கொள்ளை அழகுதான். வீட்டில் இருந்தே குடும்பத்தை கவனித்துக் கொண்டு  சம்பாதிக்க நினைக்கும் பெண்கள் எங்களை அணுகலாம்" என்கிறார்.

-மகேஸ்வரி

படங்கள் :ஜாய்சன்

Related Stories: