×

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியார், பண்ணை ஊழியர்களுக்கு இடையே மோதல்: 10 பைக்குகள் எரிப்பு: 3 பேர் கைது

பொன்னேரி:   மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள எல்என்டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்காக அருகில் வடமாநில குடியிருப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.   இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பதினோரு மணியளவில் அந்த பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றின் அருகில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் இயற்கை உபாதை கழிக்க  சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இறால் பண்ணையில் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களை விரட்டியபோது அந்த இரு வடமாநிலத் தொழிலாளர்களும் கற்களால் அவர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் ஓடி புகுந்து கொண்ட வடமாநில தொழிலாளர்களை தேடி இறால் பண்ணை ஊழியர்கள் உள்ளே சென்று அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் இறால் பண்ணை ஊழியர்கள் மூன்று பேரையும் பிடித்து வடமாநில தொழிலாளர்கள்  அடித்துள்ளனர். அவர்களை மீட்கச் சென்ற செக்யூரிட்டி அதிகாரியையும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கி உள்ளனர்.  இறால் பண்ணை ஊழியர்கள் தப்பி சென்று விட்டனர். இறால் பண்ணை ஊழியர்களுக்கு ஆதரவாக செக்யூரிட்டி அதிகாரி  செயல்படுகிறார் என்றும் தங்களுக்காக  பேசவில்லை என்றும் வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதுமட்டுமின்றி செக்யூரிட்டி அலுவலகத்தையும் தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்கள். இது குறித்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல் துறையினர், வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, காவல்துறையினர் மீதும் கற்களை வீசியும் கட்டையை  எடுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  பதற்றமான சூழல் நிலவி வருவதால் நேற்று காலை முதல் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் ஆகியோர் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தங்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கவில்லை எனவும் ஊருக்கு அனுப்பி விடுமாறும் வடமாநில தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.  பின்னர் சமரசப் பேச்சில் மீண்டும் வேலை பார்ப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே வடமாநில ஊழியர்கள் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய இறால் பண்ணை ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : Clash ,farm ,forest school ,Minsur , Clash between private and farm workers at a forest school near Minsur: 10 bikes set on fire: 3 arrested
× RELATED மும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?